மத்திய வங்கி உயரதிகாரியான தமிழ் யுவதி உயிரிழப்பு! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அண்மைக்காலங்களில் நாட்டில் பதிவாகும் விபத்துக்களுடன் தொடர்புடைய சாரதிகளில் அதிகளவானவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவிப்பது கண்டறியப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி- புதன்கிழமை மட்டக்குளி பகுதியில் நடந்த விபத்துடன் லொறி சாரதி ஹெரோயின் பாவித்துள்ளது தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சாரதியான கயன் கருணாரத்ன (28) ஹெரோயின் பாவித்தது, இரத்த பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவருக்கு சாரதி அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை.

வெல்லம்பிட்டியை சேர்ந்த கருணாரத்ன, மோதரையிலிருந்து வத்தளைக்கு முட்டைகளை கொண்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவரது லொறி கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் மையத்திலிருந்த தடுப்புக்களை உடைத்துக் கொண்டு, வீதியின் மறுபக்கத்தில்- எதிர்த்திசையிலிருந்த வந்து கொண்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகளின் மீது மோதியது.

இரண்டு முச்சக்கர வண்டிகளையும் மோதிய பின்னரும் லொறி தொடர்ந்து நகர்ந்து, அருகிலுள்ள கட்டடத்தின் வாயிலில் மோதி நின்றது.

இதையடுத்து சாரதி இறங்கி தப்பியோடி விட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

விபத்தில், லொறி மோதிய முதலாவது முச்சக்கர வண்டியின் சாரதியான 46 வயதான ரஞ்சித், அதில் பயணம் செய்த இலங்கை மத்திய வங்கியின் மூத்த உதவி இயக்குனரான அமிரா சுந்தரராஜ் (33) ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இரண்டாவது முச்சக்கர வண்டியின் ஓட்டுநரான 50 வயதான அஜித் சில்வாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அவரது முச்சக்கர வண்டியில் பயணித்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லொறியின் சாரதி அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

லொறி சாரதி வியாழக்கிழமை (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post