பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்! ஒருவர் படுகொலை!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாடசாலை அருகே ஆசிரியர் ஒருவர் கத்தியால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இக்கொலையைப் புரிந்தவர் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவரை பொலீஸார் பின்னர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.
பாரிஸ் பிராந்தியத்தின் Val-d'Oise மாவட்டத்தில் இன்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

முற்கொண்டு ஊடகங்களில் வெளியாகிய தகவல்களின்படி இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒரு சம்பவம் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றுவரு கின்றன.

Éragny-sur-Oise (Val-d'Oise) நகர்ப்பகுதியில் ஆண் ஆசிரியரை கழுத்தில் வெட்டிக் கொன்ற நபர் சடலத்துடன் நின்றவாறு கத்தியைக் காட்டி அயலில் நின்றிருந்த ஏனையோரையும் அச்சுறுத்தியுள்ளார். 

உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்த மாநகரப் பொலீஸார் ஆயுதங்களைக் கைவிடுமாறு அவரிடம் கோரினர். ஆனால் அதை ஏற்க மறுத்த தாக்குதலாளி அச்சுறுத்தியவாறு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அவரை அருகே உள்ள ஓரிடத்தில் வைத்து விசேட படையினர் சுட்டுக் கொன்றனர் என்று கூறப்படுகிறது.

இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தேசிய பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் உடனடியாகப் பொறுப்பேற்றுள்ளனர். 

கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டவர் அப்பகுதியில் உள்ள இடைநிலைக் கல்லூரி ஒன்றின் (college Conflans-Sainte-Honorine) வரலாற்றுப்பாட ஆசிரியர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் கருத்துச் சுதந்திரம் தொடர்பான பாட வேளை ஒன்றின்போது அவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு முகமது நபி தொடர்பான சர்ச்சைக்குரிய சில கேலிச் சித்திரங்களைக் காண்பித்து விளக்கமளித்திருந்தார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக சில பெற்றோர்கள் தரப்பில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியரது படுகொலைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை அறிய விசாரணையாளர்கள் முயன்று வருகின்றனர்.

கொலைச் சம்பவத்தையிட்டு தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கும் கல்வி அமைச்சர்Jean-Michel Blanquer, "இன்றிரவு ஆசிரிய சேவையாளர் ஒருவரது படுகொலை மூலம் பிரெஞ்சுக் குடியரசு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது" என்று தனது ரூவீற்றர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

அதிபர் மக்ரோன் சம்பவம் நடந்த பாடசாலைப் பகுதிக்கு இன்றிரவு விஜயம் செய்யவுள்ளார் என்று எலிஸே மாளிகை வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
Previous Post Next Post