பிரான்ஸில் கொரோனாவின் 2 ஆம் அலை தொடர்பில் நிபுணர்கள் குழு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • கார்த்திகேசு குமாரதாஸன்
பிரான்ஸில் வைரஸின் மூன்றாவது, நான்காவது அலைகள் அடிக்குமா? இந்தக் கேள்விக்கு அறிவியல் நிபுணர்கள் குழு(Conseil scientifique) விளக்கம் அளித்துள்ளது.

தற்சமயம் பிரான்ஸிலும் பல ஜரோப்பிய நாடுகளிலும் தலையெடுத்துள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இறுதியானது அல்ல என்ற எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது அக் குழு.

இந்த இரண்டாவது அலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை இப்போது நிச்சயமாக வரையறுத்துக் கூறமுடியாவிட்டாலும் இது ஆண்டின் இறுதிவரை அல்லது அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அறிவியல் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட அறிவியல் நிபுணர்கள் குழு(Conseil scientifique) நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரம் தொடர்பாக இறுதியாக வெளியிட்டிருக்கும் மதிப்பீட்டிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

"மிகக் கடுமையான நிலைமைகளுடன் கூடிய பல மாதங்கள் எங்களுக்கு முன்னே உள்ளன."

"குளிர்காலம், அதைத் தொடர்ந்துவரும் வசந்தகாலப் பகுதியின் முடிவில் (2021) தொடர்ச்சியான அலைகள் இருக்கலாம்.

" தொற்றுப் பரிசோதனை, தொற்றாளர்களைத் தேடிக்கண்டறிதல், தனிமைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கங்களின் நேர் எதிர்மாறான தன்மைகளைப் பொறுத்து புதிதாக அலைகளை நிர்வகிக்க வேண்டி வரலாம்.

எதிர்பார்க்கப்படும் தடுப்பு ஊசி அல்லது தடுப்பு மருந்து கிட்டும் வரை - 2021 இறுதி அரையாண்டுவரை - இந்த நிலைமை நீடிக்கலாம் " -இவ்வாறு நிபுணர்கள் குழுவின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post