லண்டனில் மரபு மாற்றமடைந்து புதிய வடிவில் பரவும் கொரோனா! சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் 'கொவிட் 19' வைரஸ் சற்றுத் திரிபடைந்த புதிய வடிவில் பரவிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Matt Hancock இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனின் சில பகுதிகளில் கடந்த வாரம் தொற்று வீதம் திடீரென அதிகரித்தமைக்கு திரிபடைந்த (new strain of coronavirus) புதிய வைரஸ் காரணமாக இருக்கக் கூடும் என்ற தகவலை அவர் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நிபுணர்கள் தீவிர ஆய்வுகளை நடத்திவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

லண்டன், கெனற் (Kent) ,எசெக்ஸின் சில பகுதிகள் (Essex) மற்றும் Hertfordshire ஆகிய இடங்களில் திடீரெனத் தொற்றின் வேகம் அதிகரித்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், 60 வெவ்வேறு இடங்களில் சுமார் ஆயிரம் பேரில் இந்தப் புதிய வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். 

"அது தடுப்பூசிக்குக் கட்டுப்படாத தீவிரம் பெற்ற ஒரு வைரஸா என்பதை இப்போது உறுதியாகக் கூறமுடியாது" என்பதையும் அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவித்தார். 

முதிர்ச்சியடைந்த - மரபு மாற்றம் பெற்ற - இந்த வைரஸ்தான் தொற்றுக்கள் வேகமாகப் பரவுவதற்குக் காரணமா என்பதை இன்னமும் நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கைகளில் மிக விழிப்பாக இருக்க வேண்டிய அவசியத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

லண்டன் உட்பட பல பகுதிகளிலும் தீவிர மூன்று அடுக்கு(Tier 3) வைரஸ் தடுப்பு நடைமுறைகள் புதன்கிழமை இரவு தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.
அண்மையில் டென்மார்க்கில் மிங் எனப்படும் சிறிய பண்ணை விலங்குகளில் இருந்து திரிபடைந்த வைரஸ் நூற்றுக்கணக்கானவர்களில் தொற்றி அங்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

வைரஸ்கள் பொதுவாக உயிரினங்களில் மாற்றம் அடைவது இயற்கையே. மனிதர்களில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிகரிக்க வைரஸ் அதன் தன்மைகளை மாற்றித் தன்னைத் தக்கவைப்பதற்கு முயற்சிக்கும். அதற்காக அது மரபு மாற்றம் பெறுகிறது.இது குறித்து பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார நிறுவன நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஆனால் வைரஸ் பரவலின் ஒரு கட்டத்தில் அதன் மரபுக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற தடுப்பு மருந்துகள் மரபு மாற்றம் பெற்ற புதிய வைரஸ்களின் வரவு காரணமாக வலுவிழந்து போகலாம் என்ற அச்சம் அறிவியலாளர்களிடையே நிலவுகின்றது.
Previous Post Next Post