பிரான்ஸில் திரிபடைந்த கொரோனா பரவல் தீவிரம்! -எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சர்


  • குமாரதாஸன், பாரிஸ்.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா வைரஸ் பிரான்ஸில் நாளாந்தம் 50 முதல் 150 பேர் என்ற எண்ணிக்கையில் பரவி வருகிறது.

மாறுபாடடைந்த அந்த வைரஸ் காரணமாக மற்றொரு தொற்றலை ஏற்பட இடமளித்துவிட வேண்டாம். பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று இவ்வாறு எச்சரிக்கை செய்திருக்கிறார். 

நாளாந்தபரிசோதனையாளர்களில் 2 முதல் 4 சத  வீதம் பேருக்கு டெல்ரா திரிபுத் தொற்று (variant Delta) காணப்படுவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இது மிகக் குறைவான எண்ணிக்கை என்று நீங்கள் கூறலாம். ஆனால் வரும்
வாரங்களில் அது இங்கிலாந்தின் நிலைமைக்குச் சென்று விடலாம். எனவே விழிப்பு நிலையைக் கைவிட்டுவிடாதீர்" -என்று அமைச்சர் நாட்டு மக்களுக்கு
ஆலோசனை விடுத்தார்.

இங்கிலாந்தில் டெல்ரா தொற்றுக்கள் காரணமாக சுகாதாரக் கட்டுப்பாடுகளை அடியோடு நீக்குவதை அந்நாட்டின் அரசு நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத் திருப்பது தெரிந்ததே.
  • பாரிஸ் எவ்றியில் கல்லூரியில் பலருக்கு டெல்ரா தொற்றியது!
பாரிஸின் புற நகரங்களில் ஒன்றான எவ்றி குக்குரோனில் (Evry-Courcouronnes - - Essonne) கல்லூரி ஒன்றில் ஆறு பேருக்கு டெல்ரா வைரஸ் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கை
கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தொற்றாளர்கள் ஆறுபேரும் அங்குள்ள Montesquieu college என்ற கல்லாரியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆவர்.இவர்களோடு தொடர்புடைய 140 பேர் வரை வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அங்கு டெல்ரா வைரஸ் பரவியதற்கான மூலத்தைக் கண்டறியும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • ஸ்ரார்ஸ்பூ நகரிலும் தொற்று கலைக் கல்லூரி மூடப்பட்டது!
பிரான்ஸின் கிழக்கு அல்சாஸ்(Alsace) பிராந்தியத்தின் தலைநகரமாகிய ஸ்ரார்ஸ்பூ (Strasbourg) நகரில் உள்ள கலைக் கல்லூரியில் (La Haute école des arts du Rhin) ஒரு கொத்தணியாகப் பலருக்கு இந்திய டெல்ரா தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. 

உடனடியாகக் கல்லூரி மூடப்பட்டு அங்கும் தீவிர வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். தடுப்பூசி ஏற்றும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஸ்ரார்ஸ்பூ நகரம் ஜேர்மனியின் எல்லையோரம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post