
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுருவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலம் ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேலணையின் சாட்டி கடற்கரையோரத்தில் திமிங்கிலம் ஒன்று உயிரிருடன் கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்கள் இணைந்து அதனை படகில் கட்டியிழுத்துச் சென்று நடுக்கடலில் விட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஊர்காவற்றுறையின் சுருவில் கரையோரத்தில் திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
சாட்டி கரையோரத்தில் கரையொதுங்கியதாகக் கருதப்படும் அதே திமிங்கிலமாகவே இது இருக்கலாம் என்று இரண்டையும் அவதானித்தவர்கள் தெரிவிப்பதாக அருவியின் தீவகம் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கொழும்புக் கடற்பரப்பில் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கப்பல் எரிந்து அழிந்த நிலையில் கடலாமை உட்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரையொதுங்கிவருகின்ற நிலையில் குறித்த திமிங்கிலமும் அவ்வாறான பாதிப்புக்கு உள்ளாக்கி உயிரிழந்திருக்குமோ என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

