பிரித்தானியாவில் கட்டாயமாக்கப்படவுள்ளது “தடுப்பூசி கடவுச்சீட்டு”


உலகளாவிய ரீதியில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்று காரணமாக பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் இருந்து பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் அமைச்சர் நதிம் ஜஹாவி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பொது மக்கள் அதிகமாக ஒன்றுக்கூடும் இடங்களில் இந்த திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், ஏற்கெனவே இரவு விடுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நுழைவு தேவைகளை, மற்ற வெகுஜன நிகழ்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் நதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தியமைக்காக பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் Green Pass என்று அழைக்கப்படும் அதிகாரப்பூர்வமான ஆதாரத்தை செப்டம்பர் இறுதிக்குள், கால்பந்து மைதானம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பெரிய இடங்களுக்கு கட்டாய நுழைவுத் தேவையாக மாற்றப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் மூலம் குளிர்காலத்தில் கோவிட் தொற்று அதிகரிப்பதையும், நாட்டில் பொது முடக்கம் அமுல்படுத்துவதை தவிர்க்கவும், இது உதவியாக இருக்கும் என ஜஹாவி கூறியுள்ளார்.

இந்த விதிமுறை, 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், "12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை பரிந்துரைக்கும் பட்சத்தில் நிச்சயமாக பெற்றோரிடம் சம்மதம் கேட்கப்படும் என்று ஜஹாவி உத்தரவாதமளித்துள்ளார்.
Previous Post Next Post