பிரான்ஸ் அதிபர் நாட்டு மக்களுக்கு விரைவில் உரை!


  • குமாரதாஸன், பாரிஸ். 
பிரான்ஸ் அதிபர் மக்ரோன் விரைவில் நாட்டு மக்களுக்கு உரை ஒன்றை வழங்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் செவ்வாய், அல்லது புதன்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பின்னர் அவரது உரை இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
சுகாதார நெருக்கடி காலத்தில் நாட்டுக்கு ஆற்றிவந்த உரைகளின் வரிசையில் ஒன்றாக இருப்பினும் அரசின் சீர்திருத்தத் திட்டங்களை உள்ளடக்கியதாகவும் அது இருக்கும் என்று எலிஸே மாளிகை வட்டாரங்களை ஆதாரம் காட்டி பாரிஸ்
ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

"வைரஸ் தொற்று நிலைவரத்தை எலிஸே மாளிகை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. ஐரோப்பாவில் மீண்டும் பரவல் அதிகரிப்பது தொடர்பில் அதிபர் மக்ரோன் கவலையடைந்துள்ளார்" - என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக மூன்றாவது ஊக்கத் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா, சுகாதாரப் பாஸுடன் அது இணைக்கப்படுமா என்பன போன்ற விடயங்களில் அரசின் நிலைப்பாடுகளை மக்ரோன் தனது உரையில் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஐரோப்பா மீண்டும் ஒரு தடவை வைரஸ் தொற்று மையமாக மாறிவருகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தடுப்பூசி முன்னெடுப்புகளையும் பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளையும் கைவிட வேண்டாம் என்று நாடுகளை அது கேட்டிருக்கிறது. 

இந்தப் பின்னணியில் பிரான்ஸில் தொற்றுக்கள் சீரான அதிகரிப்பைக் காட்டத் தொடங்கியுள்ளன. பாடசாலைகள் தொடங்கும் போது வகுப்பறைகளில் மாஸ்க் அணிவதை அரசு மீண்டும் கட்டாயமாக்கியிருக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமாக மூன்றாவது தடுப்பூசி பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்சமயம் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் மூன்றாவது ஊக்கத் தடுப்பூசி ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்பிரிவினருக்கும் கட்டாயமாக்கப்படவில்லை.

இந்நிலையில் தொற்றுக்கள் மற்றொரு தடவை அதிகரிப்பைக் காட்டுவதால் அவசியமானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதைக் கட்டாயமாக்குவது பற்றி அரசு கவனம் செலுத்திவருகிறது என்று பிரதமர் ஜீன் காஸ்ரோ பொது வைபவம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

"நாங்கள் தொற்றுநோயிலிருந்து இன்னமும் முற்றாக வெளியே வந்துவிடவில்லை.பிரான்ஸில் மட்டுமன்றி எல்லா இடங்களிலும் இதேநிலைமை தான். எனவே எங்களது தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை" - என்றும் பிரதமர்
கூறியிருக்கிறார்.
Previous Post Next Post