கனடாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா! எச்சரிக்கை விடுத்தது மத்திய அரசு!!


கனடாவில் கொவிட்-19 தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதுள்ளதை விட நாடெங்கும் நெருக்கடி மேலும் தீவிரமடையக் கூடும் என கனடிய மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஒமிக்ரோன் திரிபு பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கான பயணங்கள் குறித்து கனடியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் தொற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் வரவிருக்கும் விடுமுறைக் காலத்தில் அதிக எச்சரிக்கை தேவை என கனடிய தலைமை மருத்துவ அதிகாரி தெரசா டாம் கூறினார்.

கனடாவில் ஒமிக்ரோன் புதிய திரிபால் பாதிக்கப்பட்ட 87 பேர் நேற்று சனிக்கிழமை வரை உறுதி செய்யப்பட்டுள்ளனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றனர் எனவும் அவா் தெரிவித்தார்.

இதுவரை ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டவர்கள் அல்லது அவ்வாறானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் எனவும் தெரசா டாம் குறிப்பிட்டார்.

டெல்டா திரிபை விட ஒமிக்ரோன் வேகமாகப் பரவக்கூடியது. இது தொற்று நோய் பரவல் மீண்டும் உயர்வதற்கு வழிவகுக்கும். தற்போது தொற்று நோய் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இது தேசிய அளவில் நிலைமை தீவிரமடைய வழிவகுக்கும் என்ற அச்சம் உள்ளது எனவும் கனடிய தலைமை மருத்துவ அதிகாரி தெரசா டாம் தெரிவித்தார்.

நவம்பர் 27-ஆம் திகதி நிலவரப்படி 12 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களில் 86.2% பேர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.

இதேவேளை, ஓமிக்ரோன் புதிய திரிபு இதுவரை 59 நாடுகளில் பதிவாகியுள்ளது. இதனால் உலகெங்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post