12-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது வெள்ளியன்று ஆரம்பம்! திங்கள் முதல் வழமைக்குத் திரும்பும் பாடசாலைகள்!!


இலங்கையில் 12-15 வயதுடைய மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 15-19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களில் நோய் நிலை காரணங்களின் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 30 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது, ​​12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு அலகு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இணையாக பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத பாடசாலை ஆசிரியர்களுக்கும் அந்த இடங்களில் தடுப்பூசி போட முடியும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்களும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் ஒரே நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற முடியும் என்றும், கோவிட் பெருத்தொற்றின் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் புதிய இயல்புநிலையுடன், எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலைகள் வழமையான நிலையில் பராமரிக்கப்படும் எனவும், அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் பாடசாலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தற்போது, ​​தடுப்பூசி மூலம் வெற்றிகரமான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் பொதுமைப்படுத்தலில் கல்வித் துறை மிகவும் முக்கியமானது. இதன்படி, சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து முழு கல்வித் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளன.

இதுவரை, தடுப்பூசி மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான பல சவால்கள் சமாளிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் சேர்ந்து, அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல உங்கள் முழு ஆதரவையும் கொடுங்கள் என்றும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.
Previous Post Next Post