முககவசம், தடுப்பூசி அட்டை இனி கட்டாயமில்லை! கொரோனாத் தொற்று சற்றும் அடங்காத நிலையில் அதிரடியாக அறிவித்தது இங்கிலாந்து!!


இங்கிலாந்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிவு கொரோனா வைரஸ் பரவலால் தினசரி ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் பதிவாகி வரும் நாட்டில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 27-ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் முகக்கவச கட்டாய நடைமுறை நீக்கப்படும். அத்துடன், பொது இடங்களில் நடமாட தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை எனவும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் வகுப்பறைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடும் உடனடியாக நீக்கப்பட்டது.

தொற்று நோய் சற்றும் அடங்காத நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அரசு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளமை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 108,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 359 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று நாடாளுமன்றில் வெளியிட்டார்.

அத்துடன் இனிமேல் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி மக்களை அரசாங்கம் கேட்காது என்றும் மக்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து தங்கள் முதலாளியிடம் பேச வேண்டும் என்றும் போரின் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசி திட்டம் பிரிட்டன் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டார்.
Previous Post Next Post