பிரிட்டிஷ் பிரதமருக்கான போட்டி! முடிவை அறிவித்தார் ரிஷி!! ஜோன்சனுடனான சமரசப் பேச்சு தோல்வி!!!

பிரிட்டிஷ் பழமைவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கும் நாட்டின் பிரதமர் பதவிக்கும் போட்டியிடுகின்ற தனது முடிவை ரிஷி சுனாக் (Rishi Sunak) இன்று ஞாயிற்றுக்கிழமை தனது ருவீற்றரில் வெளியிட்டிருக்கிறார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் ஜோன்சனும் தனது முடிவை எந்நேரமும் வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தலைமைத்துவப் போட்டியைத் தவிர்த்துவிட்டு ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைவர் தெரிவை மேற்கொள்வது குறித்து ஜோன்சனுக்கும் ரிஷி சுனாக்கிற்கும் இடையே சனி இரவு நடந்த பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

லிஸ் ட்ரஸ் அம்மையார் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து பழைமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட இருப்பது தெரிந்ததே.

லண்டனில் ஆட்சிக் குழப்பநிலை ஏற்பட்ட சமயத்தில் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது குடும்பத்துடன் கரீபியன் தீவில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார். எனினும் உடனடியாக அவர் பிரிட்டிஷ் எயார் லைன்ஸ் விமானம் ஒன்றில் லண்டன் திரும்பினார். அதன் பிறகு நேற்றிரவு அவருக்கும் ரிஷி சுனாக்கிற்கும் இடையே போட்டித் தவிர்ப்பு இணக்கப் பேச்சு இடம்பெற்றது. அதன் பிறகே தனித்துத் தலைமைத்துவப் போட்டியில் களம் இறங்கும் தனது முடிவை ரிஷி வெளியிட்டிருக்கிறார். அவருக்குக்கட்சி எம்.பிக்களில் 125 பேர் தங்கள் ஆதரவை வெளியிட்டிருக்கின்றனர்.

எனவே போட்டிக் களத்தில் அவரே முன்னணியில் இருக்கிறார். பொறிஸ் ஜோன்சனுக்கு 56 எம்பிக்களது ஆதரவும் மூன்றாவது இடத்தில் பென்னி மோர்டான்ட் அம்மையாருக்கு 23 உறுப்பினர்களது ஆதரவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தெரிவுப் போட்டியில் நுழைவதற்கு வேட்பாளர் ஒருவர் குறைந்தது கட்சி எம்பிக்கள் 100 பேரது ஆதரவைத்திரட்டி உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான அவகாசம் நாளை திங்கட்கிழமை நண்பகலுடன் முடிவடையவுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சராகிய ரிஷி சுனாக், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் செய்யப்போவதாக உறுதியளித்திருக்கிறார். எனினும் கட்சிக்குள் காணப்படும் குழப்பங்கள் உறுதியான தலைமைத்துவம் ஒன்றை ஏற்படுத்தப் போவதில்லை என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

ரிஷி சுனாக் பிரதமர் பதவிக்கு வந்தலும் சில வாரங்களில் நாடு பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையே உருவாகும் என்று எதிர்க் கட்சியாகிய தொழிற் கட்சி எதிர்பார்க்கிறது.

ரிஷி சுனாக் 1980 இல் சவுத்தாம்டனில் ( Southampton) பிறந்தவர். அவரது பெற்றோர் இந்திய-இந்துப் பூர்வீகம் கொண்டவர்கள். கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள். இந்தியாவின் பிரபல செல்வந்த வர்த்தகர் என். ஆர். நாராயணமூர்த்தியின் மகளாகிய அக் ஷதா மூர்த்தியைத் திருமணம் முடித்தவர்.

2019 இல் பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில், "நான் ஓர் இந்து. வார இறுதி நாட்களை நான் கோவிலிலும் சவுத்தாம்டன் உதைபந்தாட்டக் கழகத்திலும் கழிப்பேன் "-என்று கூறியிருந்தார்.

அடுத்த சில நாட்களில் அவர் கட்சித் தலைமைப் பதவியை வென்று நாட்டின் பிரதமராகத் தெரிவானால் வரலாற்றில் பிரிட்டிஷ் பிரதமராகத் தெரிவாகின்ற முதலாவது ஆசிய வம்சாவளித் தலைவர் என்ற பெருமை அவரைச் சாரும்.
Previous Post Next Post