யாழ்.வேலணையில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தட்டிக் கேட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு!

யாழ்.வேலணை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் அளவு மீறிய போதைப் பொருள் பாவனை தொடர்பாக தட்டிக்கேட்ட முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் மீது நேற்று இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வேலணை கிழக்கு முத்துமாரி அம்மன்கோவிலடிப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை போதைப்பொருள் விற்பனை மற்றும் கால்நடைத் திருட்டு என்பவற்றை தடுப்பதற்காக தீவக சிவில் சமூகத்துடன் சேர்ந்து முன்னாள் வேலணை பிரதேசசபை உறுப்பினர் சிவனேசன் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் இரவு 9 மணியளவில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் முன்னாள் பிரதேசசபை உறுப்பினரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் வேலணை மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
Previous Post Next Post