அணுத் தாக்குதல் நடத்தினால் ரஷ்ய இராணுவம் அடியோடு அழிக்கப்படும்!

ரஷ்யா நடத்தக் கூடிய அணு ஆயுதத் தாக்குதல்கள் - அவை சிறிதாக இருந்தாலும் கூட - நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டணி நாடுகளின் பதிலடி மிகப் பலமாக இருக்கும். ஆனால் அது அணு ஆயுதப் பதிலடியாக இருக்காது. மாறாக ஒட்டுமொத்த கூட்டணி நாடுகளினதும் சக்தி வாய்ந்த இராணுவப் பதிலடியாக இருக்கும். இதனை மொஸ்கோ தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய மற்றும் நேட்டோ கூட்டணி ராஜதந்திரிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களது கூட்டம் பெல்ஜியம் நாட்டின் ப்ரூஜெஸில் (Bruges) அமைந்துள்ள ஐரோப்பியக் கல்லூரியில் (College of Europe) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஜதந்திரிகள் பலரும் ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலுக்கான பதிலடி குறித்துப் பிரஸ்தாபித்திருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்துமாகவிருந்தால் நேட்டோ கூட்டணி நாடுகளின் பதிலடி மிகத் தீவிரமாக இருக்கும். அது ரஷ்யப் படைகளை முற்றாகத் துடைத்தழித்துவிடும் என்று ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரக் கொள்கைகளுக்கான பொறுப்பாளர் ஜோசப் பொரெல்(Josep Borrell) அங்கு எச்சரிக்கை விடுத்தார்.

எதுவாக இருந்தாலும் உக்ரைனுக்கு எதிராக மொஸ்கோ நடத்தக் கூடிய அணு ஆயுதத் தாக்குதல் பாரதூரமான பதில் விளைவுகளை ஏற்படுத்தும். போரின் போக்கை அது அடியோடு மாற்றிவிடும் என்று நேட்டோ வட அத்திலாந்திக் கூட்டணி நாடுகளது அமைப்பின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) அங்கு குறிப்பிட்டார்.

நேட்டோ கூட்டணி ஓர் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் வெகு தொலைவு. உறுப்பு நாடு ஒன்றின் மீது அணு ஆயுதத் தாக்குதல் தொடுக்கப்பட்டால் மாத்திரமே ஒப்பந்த விதிப்படி (Article 5) அணு ஆயுதத் தாக்குதல் மூலம் நேட்டோ பதிலளிக்கும். உக்ரைன் விடயத்தில் இந்த விதி பொருந்தாது.

நேட்டோவின் அணு ஆயுத சாதனங்கள் (nuclear deterrent) உறுப்பு நாடு ஒன்று தாக்கப்பட்டால் மட்டுமே தொழிற்படும். -இவ்வாறு நேட்டோ செயலாளர் நாயகம் நிலைமையை விவரித்தார்.

கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் (Secretary of Defense Lloyd Austin) லொய்ட் ஒஸ்ரின் - ரஷ்யாவின் அச்சுறுத்தலை நேட்டோ அணி நாடுகள் தீவிர கவனத்தில் எடுத்துள்ளன. அவர்கள் (ரஷ்யா) ஆபத்தானவர்கள், பொறுப்பற்றவர்கள்.

ரஷ்ய அதன் அணு ஆயுதங்களை நகர்த்தியதாக இதுவரை தகவல் இல்லை. நாங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் அதனைக் கண்காணித்து வருகின்றோம். எங்களிடம் மிகச் சரியான தகவல்கள் உள்ளன - என்று தெரிவித்தார்.

உக்ரைனில் அண்மையில் ரஷ்யா ஆக்கிரமித்து இணைத்துக் கொண்ட நான்கு பிராந்தியங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமாக இருந்தால் மொஸ்கோ தந்திரோபாய அணு ஆயுதங்கள் உட்பட எல்லா வகையான பதிலடிகள் மூலம் அதனைத் தடுக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெட்வெடேவ் (Dmitry Medvedev) எச்சரித்திருக்கிறார். அந்த எச்சரிக்கையை அடுத்தே நேட்டோ ராஜதந்திரிகளது இத்தகைய கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
Previous Post Next Post