பிரான்ஸ் உணவகங்களில் பணியாற்றும் யாழ்.தமிழர்களின் வாழ்வாதாரத்தில் விழுந்தது இடி! (பரிசிலிருந்து சுதன்ராஜ்)

இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளை, மருத்துமனைகளில் 11 060 பேரும், 6860 பேர் மூதாளர் இல்லங்களில 6860 பேருமாக 17 920 பேர் கொரோனா வைரசுக்கு இலக்காகி பிரான்சில் உயிரிந்துள்ளனர். உயிரிழப்புக்களின் அதிஉச்சநிலை என்பது செங்குத்தாக குறையாமல், தட்டையாக நீடித்து செல்வதோடு, கீழ்நோக்கி எப்போது செல்லும் என்ற எதிர்பார்ப்போடு பிரென்சு தேசம் காத்திருக்கின்றது.

பொதுமுடக்கம் எதிர்வரும் 11ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மே 11க்கு பின்னராக சுவாசக்கவசம் அனைவரும் அணிதல் என்பது கட்டாயமாக்கப்படுவதோடு, கொரோனாவில் இருந்து விடுதல் ஆகும் வரைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டிக்கோவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாழ்க்கை முன்னர் போல் அல்லாது புதியதொரு வாழ்க்கை முறைக்குள் செல்ல அனைவரும் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்திருந்துள்ள பிரான்சின் அதிபர் ஏமானுவல் மக்ரோன், அனைவரும் இச்சவாலை அமைதியாகவும், தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என நாட்டுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக மே 11ம் திகதிக்கு பின்னராகவும் முதியோர்கள், பாரிய நோய் உள்ளவர்கள் தொடர்ந்தும் வீடுகளில் இருக்க வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணளவாக 18 மில்லியன் பேர் வீடுகளில் தொடர்ந்து முடங்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

அதாவது கொரோனாவுக்கு எதிரான தடுப்புமருந்து காணப்படாதவரையிலும் நிச்சமற்ற உலகின் போக்கையே இது வெளிப்படுத்துவதோடு, 2022ம் ஆண்டு வரை மனிதர்களுக்கு இடையேயான சமூக இடைவெளி பேணப்பட வேண்டிய நிலையினை இது ஏற்படுத்துகின்றது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உணவகங்கள், குடிப்பகங்கள், அருங்காட்சியங்கள், திரையரங்குள், நாடக அரங்குகள் உட்பட பொதுமக்கள் கூடுகின்ற மையங்கள் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, யூலை நடுப்பகுதி வரை களியாட்ட நிகழ்வுகள், இதர பெருநிகழ்வுகள் யாவும் தடைசெய்யப்படுவததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்களை சோதனை செய்யும் முறை, வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கப்பட்டு யூன் மாதத்தில் நாளொன்று 1 இலட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மே 11க்கு பின்னராக வைரஸ் தொற்றுள்ளவர்களைஉரியமுறையில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ள வருகின்றன. குறிப்பாக தலைநகர் பரிசினை மையப்படுத்தி இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் 300 விடுதிகள் இதற்கென ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் ஒரு மாதகால பொதுமுடக்கத்துக்கு பின்னராக பாடசாலைகளை மீளத்திறந்த நாடாக டென்மார்க் மாறியுள்ள நிலையில், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் பிரான்சிலும் மே 11 முதல் படிமுறையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான சாதகமான நிலை பிரான்சில் காணப்படவில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்ணளவாக 30 அளவிலான மாணவர்கள் வகுப்புக்களின் காணப்படுகின்ற நிலையில், வகுப்பறையில் மாணவர்களுக்கான இடையிலான சுகாதார இடைவெளியினை பேணுவது என்பது மாணவர்களின் தொகைக்கு பெரும் சவாலாக உள்ளது.சுகாதார நடைமுறைகளை பேணச்சொல்லி பிள்ளைகளிடத்தில் தெரிவித்திருந்தாலும், பிள்ளைகளின் இயல்பும், ஒன்றாக கூடி விளையாடுவதும் போன்ற விடயங்களால் சுகாதார நடைமுறைகளை பிள்ளைகளால் பேணுவது என்பது கேள்விக்குறியே என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பெரும்பாலும் பிள்ளைகளிடத்தில் வெளிப்படாது மறைந்தாலும், அது பெரியவர்களின் தாவுகின்ற நிலை உள்ளது. இந்நிலையில் பாடசாலைகளில் இருந்து வீடுகளுக்கு பிள்ளைகள் வைரசினை காவிக் கொண்டு வருகின்ற நிலையினையே பாடசாலைகளின் மீளதிறப்பினால் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் ஒன்றியம் அரசாங்கத்துக்கு எச்சரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கம் அரசபீடங்க் முதல் தனிநபர்கள் வரை கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவரும் நிலையில், பிரான்சிலும் அதன்தாக்கம் தெரிகின்றது. வாழ்வாதர நெருக்கடியுள்ளவர்களுக்கான அடிப்படைதேவைகளுக்கான உதவிகள், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழில்நிறுவனங்களுக்கான உதவிகள் என்று பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களும் இதன்தாக்கத்தை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

குட்டி யாழ்ப்பாணம் என செல்லமாக அழைக்கப்படுகின்ற தலைநகர் பரிசில் உள்ள லாச்சப்பல் தமிழர் வர்த்தகமையம் கடந்த ஐந்தாவது வாராமாக முடங்கிப்போயுள்ளது. நாள் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் பயணிகள் வந்து செல்கின்ற ஐரோப்பாவின் முக்கியமான தொடருந்து நிலையமாகவுள்ள கார்து து நோர்த் தொடருந்து நிலையத்தினை மையப்படுத்தி அமைந்துள்ள தமிழர்களின் வர்த்தக மையம், வெறிச்சோடியுள்ளது.

ஒரு சில பல்பொருள் அங்காடிகள், மூன்று இறைச்சிக்கடைகள் தவிர பிற நிறுவனங்கள் யாவும் மூடியுள்ளன. பல இட்சம் யுறோ வருவாய் இழப்பினை தமிழர் வர்த்தக பகுதி சந்தித்து வருவதோடு, பல நூறுபேர் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர்.
- பரிஸ் மாணிக்கப் பிள்ளையாா் - இதுவும் பக்தா்கள் இன்றி வெறிச்சோடிப் போனது
குறிப்பாக உணவகங்கள் மறுஅறிவித்தல் வரும்வரை மூடப்பட்டிருக்க வேண்டுமென அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர் வர்த்தக பகுதிகளில் பெரும்பாலும் காணப்படுகின்ற உணவகங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தமிழர்கள் மட்டுமல்ல வேற்று இனத்தவர்கள் பலநூறு பேர் அன்றாடம் உணவகங்களை நிரப்பியிருந்த நிலையே இருந்துள்ளது. பெரும்பாலும் பரிசுக்கு வெளியே புறநகர் பகுதிகளிலேயே தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வந்தாலும், லாச்சபல் தமிழர் வர்த்தக மையம் என்பது அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது.

மே11க்கு பின்னராக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட இருக்கின்ற வழிகாட்டிக்கோவை என்பது எவ்வளவு தூரம் மக்களை லாச்சப்பல் வரை, தூண்டும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சுவாசக் கவசம் கட்டாயம் அணியப்படவேண்டும், கைகள் அடிக்கடி கழுவவேண்டும், கையுறைகள் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பேணப்பட வேண்டும் போன்ற பல விடயங்கள் கட்டாயங்களாக காணப்படுகின்ற நிலையில், மக்களின் மனங்கள் என்பது ஒருவித அச்சங்கலந்த ஒரு வாழ்வியல் நிலைக்கே தள்ளுகின்றது.

இந்நிலையில் பெரும்பகுதி வாடிக்கையாளர்கள் தமிழர் வர்த்தக லாச்சபலை நோக்கி வருவது என்பது தற்போதைக்கு உடனடிச்சாத்தியம் இல்ல என்பதே உண்மை. இது பெரும்நெருக்கடியினை தமிழர் வர்த்தக மையத்துக்கு ஏற்படுத்த உள்ளது.

மறுபுறம் பிரான்சில் பெரும்பாலான தமிழர்கள் உணவகங்களிலேயே வேலைசெய்பவர்களாகவுள்ளனர். தலைநகர் பரிசில் இருக்கின்ற உணவகங்களில் பெரும்பாரும் தமிழர்கள் இருவர் வேலை செய்கின்ற நிலையினைக் காணலாம். சுத்தம், நேர்மை, பொறுப்பு, கடினஉழைப்பு என தமிழர்களின் தொழில்பண்பு குறித்து பிரென்சு உணவகங்களில் தமிழர்களின் வகிபாகம் குறித்தெல்லாம் எழுதியிருக்கின்றன.

இந்நிலையில், மறுஅறிவித்தல் வரை உணவகங்கள், அருந்தகங்கள் திறக்கபடமுடியாது என்ற அரசாங்கத்தின் அறிவித்தல் என்பது உணவகங்களில் தொழில்புரிகின்ற தமிழர்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தும் என்றே கருதலாம்.

முறையாக பதிவு செய்யப்பட்ட முறைக்கு அமைய சம்பளத்தினை பெறுவது மட்டுமல்லாது, மேலதிகமாக பணியாற்றி கையில் ஒரு தொகுதி சம்பளத்தினை பெறுகின்றவர்களின் நிலை என்பது நெருக்கடியானதாகவே உள்ளது.

இரண்டு வருவாயினையும் நம்பி தமது மாதாந்த செலவினை பேணிவந்தவர்களுக்கு (வீட்டுத்தேவைகள் தவிர, சீட்டு, வட்டி, இதர விடயங்கள்…) ஒரு தொகுதி வருவாய் இழப்பு என்பது நெருக்கடிதான்.

முறையாக பதிந்து வேலைசெய்தவர்களுக்கு 84வீதமான சம்பளத்தினை அரசாங்கம் வழங்கிவருகின்றது. இது தற்காலிகமானது என்பது மட்டுமல்லாது, மீளவும் உணவகங்கள் திறக்கப்பட்டாலும் பொருளாதார இழப்புக்களில் இருந்து இவைகள் தம்மை மீளக்கட்டியெழுப்பும் போது பலர் வேலையிழப்பினை சந்திக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

பல உணவகங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்கின்ற முறைக்கு தம்மை மாற்றிக் கொள்வதோடு, இணைய செயலிகள் மூலம் வியாபார முறையினை மாற்ற எத்தனிக்கின்றனர். இதுவும் ஒரு தொகுதி வேலையிழப்புக்கு வழிவகை செய்யப்போகின்றது.

40 வீதமான உணவகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பிரான்சின் பிரபல அட்டில்கலைஞர் பிலிப் எட்பெஸ்ற் தெரிவித்துள்ளார்.  இந்த 40வீதமான உணவகங்களின் தொழில்புரிகின்ற தமிழர்கள் தமது எதிர்காலத்துக்கான புதியவாய்ப்புக்களை நம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தினை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post