மகளைக் கடத்தி, பொலிஸாருக்கு சவால் விடுத்தவர் மடக்கிப் பிடிப்பு! சிறுமியும் மீட்பு!!

தனது மகளையே கடத்தி பொலிஸாருக்கு சவால் விடுத்த நபரை சாவகச்சேரியில் வைத்து மடக்கிப் பிடித்து சிறுமியையும் மீட்டெடுத்தனர் பருத்தித்துறை பொலிஸார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்று (ஜூன்-3) இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த இரண்டு வயதுடைய ஆர்கலி என்ற சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்து.

குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சிறுமியின் கடத்தலுக்கு தந்தையே காரணமாக இருக்கலாம் என தாயாரால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது தொலைபேசி உரையாடல் அதனை உறுதி செய்துள்ளது.

இதனிடையே இன்று காலை பருத்தித்துறை பொலிஸாரை தொடர்புகொண்ட தந்தை முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு சவால் விடுத்ததாக பொலிஸ் தரப்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்திருந்தன.

குழந்தையை கடத்தியிருந்த குறித்த நபர் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனியாக உடைமைகளுடன் சாவகச்சேரியில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வருமாறும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவேண்டாம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் தாயாரால் பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தாயாரை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்திய பொலிஸார் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து சிவில் உடையில் காத்திருந்த நிலையில் அவர் கடத்திவைத்திருந்த பிள்ளையுடன் அங்கு சென்றவேளை மடக்கிப்பிடிக்கப்பட்டிருக்கினறார். குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரையும் குழந்தையையும் பருத்தித்துறை பொலிஸார், பருத்தித்துறை பொலிஸ் நிலையம் கொண்டுசென்றிருப்பதாக தெரியவருகிறது.

தொடா்புபட்ட செய்தி-
“முடிந்தால் என்னைப் பிடியுங்கள்” யாழில் சிறுமியைக் கடத்திய தந்தை பொலிஸாருக்குச் சவால்! 
யாழில் பரபரப்பு! மதிலேறி வந்து இரண்டரை வயதுப் பிள்ளை கடத்தல்!!
Previous Post Next Post