தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்கு அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளிட்ட 19 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசாவுக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படவேண்டும் என்று கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளை கோரியிருந்ததுடன், அவரது நியமனத்தை எதிர்பார்த்துமிருந்தது.
தமிழ் அரசுக் கட்சிக்கு இம்முறை ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த இரண்டு நாள்கள் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இந்த நிலையில் அம்பாறை மாவட்டம் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில் அந்த மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
