இளையோர் ‘ஒன்லைன்’ ஊடகத்துக்கு நேர்காணலை வழங்கிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரதான ஊடகங்களை விட சமூக ஊடகங்களே இளைய தலைமுறையை ஈர்க்கிறது. அவர்களுக்குச் சேர வேண்டிய விடயங்களை அவற்றின் ஊடாக அணுகிச் சொல்ல வேண்டிய மாற்றத்துக்குரிய கால கட்டம் இது.

முழுக்க முழுக்க சமூகவலைத்தளங்கள் ஊடாக ஒளிபரப்பப்படும் ‘ஒன் லைன்’ வீடியோ மீடியா ஒன்றுக்குத் தனது நீண்ட நேர்காணலை வழங்கியிருக்கிறார் பிரெஞ்சு அதிபர் மக்ரோன்.

ருவீற்றர், முகநூல், ரிக்ரொக், யூரியூப் என முழுவதும் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பப்படுகின்ற ‘புறு மீடியா’ வில் (https://www.brut.media/fr) மக்ரோனின் செவ்வி நேற்று ஒளிபரப்பாகியது..

மக்ரோன் தனது செவ்வியின் இடையில் இளையவர்களுடன் “ஸ்னப் சற்”(Snapchat) மூலம் இணைந்து கொண்டு அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பொலீஸ் விவகாரங்களை பிரதானமாகக் கொண்டிருந்த அந்த செவ்வியில் சுகாதாரம், பொருளாதாரம், உயர் கல்வி, சுற்றுச் சூழல், பிரிவினைவாதம், பெண்களின் பாதுகாப்பு என வேறு பல விடயங்கள் தொடர்பான தனது நிலைப்பாடுகளையும் அவர் வெளியிட்டார்.

2016 இல் தொடங்கப்பட்ட “புறு மீடியா” பிரான்ஸில் இளையவர் மத்தியில் பெரும் செல்வாக்குச் செலுத்திவரும் ஒன் லைன் ஊடகம் ஆகும். ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் கடப்பதற்குள் கடந்த ஆண்டு ஒக்ரோபரில் புறு மீடியாவின் வீடியோக்கள் உலகெங்கும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 1.1 பில்லியன் பார்வைகளைப் (“views”) பெற்றன.

சமூகவலைத் தளங்களைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும் தங்கள் அரசியல் இலக்குகளை எட்டுவதற்கான பிரதான பிரசாரப் பீரங்கியாக அவற்றைப் பயன்படுத்திப் புதிய தலைமுறையினரை வெற்றிகொள்ளத் தலைவர்கள் முயற்சிப்பது தெரிகிறது.

பிரான்ஸின் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான 69 வயதான ஜீன் லுக் மெலென்சோன் (Jean-Luc Mélenchon) அண்மையில் பிரசாரத்துக்காகத் தனது ‘ரிக்ரொக்’ (Tiktok) வீடியோவை அறிமுகப்படுத்தினார்.

பொதுவாகப் பழமைபேணிவந்த அரசியல் தலைவர்கள் பலரும்கூட அடுத்த தலைமுறை வாக்காளர்களை இலக்காகக் கொண்டு நவீன ஒன் லைன் டிஜிட்டல் தொழில்நுட்ப ஊடகங்களோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதை இது காட்டுகிறது.
Previous Post Next Post