- குமாரதாஸன், பாரிஸ்.
பிரான்ஸின் Dordogne என்னும் இடத்தில் சிறிய காட்டுப் பகுதி ஒன்றில் நேற்று முதல் மறைந்திருந்த ஆபத்தான அந்த ஆயுதபாணி கைது நடவடிக்கையின் போது படுகாயமடைந்தார் என்று பொலீ ஸார் தெரிவித்திருக்கின்றனர்.
பிரான்ஸின் Nouvelle-Aquitaine பிராந்தி யத்தில் Dordogne மாவட்டத்தில் காட்டுப் பகுதி ஒன்றில் மறைந்திருந்த அந்த நபரைப் பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கான பொலீஸ் அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் நேற்று அதிகாலை முதல் ஹெலிக்கொப்ரர்களின் உதவியுடன் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நிலையில் இன்று நண்பகல்வேளை கொமாண்டோ படையினர் அவர் ஒளிந்திருந்த இடத்தை நெருங்கி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
கைது நடவடிக்கையின் போது காட்டுப்பகுதியில் பெரும் வெடியோசைகள் கேட்டன என்று அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் றொணி சூ புவாவைப் (Rosny- sous-Bois) பிறப்பிடமாகக் கொண்ட
அந்த நபர் Dordogne மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் அவர் தனது முன்னாள் மனைவிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
குடும்ப வன்முறைகளுக்காகக் காலில் 'காப்பு' (electronic bracelet) அணிவித்த நிலையில் கண்காணிக்கப்பட்டுவந்தவர் என்றும் கூறப்படு கிறது.
அண்மையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு தனது முன்னாள் மனைவியின் இல்லத்துக்குத் துப்பாக்கிகளுடன் சென்று அங்கு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மனைவியின் தற்போதைய கணவனைத் தாக்கியுள்ளார்.
பெண்ணையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அங்கு விரைந்த பொலீஸார் மீது அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். பொலீஸ் வாகனங்களை நோக்கியும் சுட்டுச் சேதப்படுத்தியுள்ளார்.
பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பிச்செல்ல முயன்ற அவரைத் தேடுவதற்காக அழைக்கப்பட்ட பொலீஸ் ஹெலிக்கொப்ரர் ஒன்றின் மீதும் அவர் சுட்டுள்ளார்.
நான்கு தடவை சிறை சென்று வந்த 29 வயதுடைய அந்த நபர் ஆயுதங்களைச்
சரியாகக் கையாள்வதிலும் இலக்கு வைத்துச் சுடுவதிலும் தேர்ந்தவராக
இருந்ததால் எப்படியாவது அவரைச் சரணடைய வைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன.
சரியாகக் கையாள்வதிலும் இலக்கு வைத்துச் சுடுவதிலும் தேர்ந்தவராக
இருந்ததால் எப்படியாவது அவரைச் சரணடைய வைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன.
நாட்டின் தென் மேற்கே Dordogne மாவட்டத்தில் Lardin-Saint-Lazarre என்னும்
இடத்தில் அவர் ஒளிந்திருந்த பிரதேசத்து மக்கள் பாதுகாப்புக் கருதி வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்கப்பட்டிருந்தனர்.
பிரான்ஸின் குடும்ப வன்முறைகளில் ஆயுத பயன்பாடு அதிகரித்து வருகிறறமை குறிப்பிடத்தக்கது.