
வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்ட கனேடிய முஸ்லிம் குடும்பமொன்றைச் சோ்ந்த நான்கு பேரின் இறுதிச் சடங்கில் பல நூற்றுக்கணக்கான கனேடியர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
கனேடிய தேசியக் கொடிகளால் போர்த்தப்பட்ட நான்கு உடல்களும் தென்மேற்கு ஒன்ராறியோவில் உள்ள இஸ்லாமிய மைய வளாகத்தில் சனிக்கிழமை வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வில் மத மற்றும் சமூகத் தலைவர்கள் திரண்டு கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஒன்றாரியோ மாகாணம் ரொரண்டோவுக்கு தென்மேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள லண்டன் நகரில் கடந்த 6-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது வாகனத்தால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான நதானியேல் வெல்ட்மேன் என்ற கனேடிய இளைஞன் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. இன வெறுப்பால் இப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட குடும்பம் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து குடியேறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே கெல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்களில் பல நூற்றுக்கணக்கான கனேடியர்கள் பங்கேற்று அவர்களுக்கு இறுதி விடையளித்தனர்.
"நிறம் மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மனிதர்கள் என்ற அடிப்படையில் கனேடியர்கள் அனைவரும் எங்களோடு இணைந்திருப்பது ஆயுதல் அளிக்கிறது” என இறுதி அஞ்சலி நிகழ்வில் பேசிய பலியானவர்களில் ஒருவரான மடிஹா சல்மானின் தாய்மாமன் அலி இஸ்லாம் கூறினார்.