மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு!!


இணையவழியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறைக்கு நிதி அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவ்வாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத் தடை காலப்பகுதியில் இணையவழி மதுபான விற்பனைக்கு கோவிட்-19 நோய்க்கட்டுப்பாட்டு செயலணியினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியினால் அனுமதியளிக்கப்பட்டால் இணையவழி மதுபான விற்பனைக்கு சுப்பர் மார்க்கட் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் 5 லீற்றர் உள்ளூர் மதுபானம் அல்லது 12 லீற்றர் வெளிநாட்டு மதுபானங்களை மட்டுமே கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும் பல்பொருள் அங்காடிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபானங்களை விற்க அனுமதிக்க நிதி அமைச்சு அனுமதியளித்துள்ளது.
  • ஒன்லைன் மதுபான விற்பனைத் திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு
பயணக் கட்டுப்பாடுகளின் காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையவழியில் பதிவு செய்து மதுபானம் விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்துகிறது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர், மருத்துவர் பிரசாத் கொலம்பேஜ் இதனைத் தெரிவித்தார்.

“இதுபோன்ற ஒரு திட்டத்திற்கான தயாரிப்பு சதித்திட்டம் என்பதில் கடுமையான சந்தேகம் உள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால் பல அத்தியாவசிய செயல்பாடுகள் சீர்குலைந்திருக்கும் நேரத்தில் மதுபானத்துக்கு ஒரு பொறிமுறையை அமைப்பது கேள்விக்குரியது.

இணையவழி மதுபான விற்பனை செய்வதற்கான வழிமுறை செயல்படுத்தப்பட்டால், அது சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்” என்றும் மருத்துவர் பிரசாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.
Previous Post Next Post