
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் காணாமல் போனவர் பச்சை புல்மோட்டை குளத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் அவரை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிராம மக்கள் காலை முதல் தேடுதல் மேற்கொண்ட நிலையில் சற்று முன்னர் பச்சை புல்மோட்டை குளத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஆனந்தபுரம் கிராமத்தினை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று இரவு வீட்டில் இருந்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று நண்பகலாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் நந்திக்கடலில் தொழில் செய்யும் பகுதிக்கு சென்று தேடியும் காணாத நிலையில் அவரது குடும்பத்தினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஊர்மக்கள் அனைவரும் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் சடலமக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பகுதிக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைத் தொழில் காரணமாக மீனவர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றதோடு நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




