ஐரோப்பாவில் “கொலம்பியாத் திரிபு”! தடுப்பூசி ஏற்றியும் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழப்பு!!


  • குமாரதாஸன், பாரிஸ். 
கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது. 

பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அந்தநாடு அறிவித்திருக்கிறது. அந்த ஏழு மூதாளர்களும் முழுமையாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் ஆவர்.

கொலம்பியாவில் தோன்றிய இந்த வைரஸ் முதலில் அமெரிக்காவிலும் ஏனைய சில தென்னமெரிக்க நாடுகளி லும் தொற்றி இருந்தது.தற்சமயம் அது
ஐரோப்பாவில் பரவத் தொடங்கியுள்ளது.
 
பிரான்ஸின் வட பிராந்தியமான Hauts-de-France பகுதியில் கொலம்பிய வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியம் ஏற்கனவே டெல்ரா தொற்றுக்களில் முன்னணியில் உள்ளது.

பிரான்ஸில் இதுவரை 56 பேருக்குக் கொலம்பியாத் திரிபுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.
 
உலகில் சுமார் 36 நாடுகளில் பரவியுள்ள கொலம்பியா திரிபுக்கு (Colombian variant) உலக சுகாதாரநிறுவனம் இன்னமும் முறைப்படி கிரேக்க இலக்கப் பெயரைச் சூட்டவில்லை. B.1.621 என்னும் அறிவியல் குறியீட்டுப் பெயருடன் உள்ள அந்த வைரஸ் திரிபு தடுப்பூசிகளை எதிர்க்கக் கூடிய வல்லமை கொண்டதாக இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் போர் தற்போது வேறு களங்களுக்கு - அதாவது புதிய திரிபுகளுக்கு எதிரான சண்டையாக - மாறிவிட்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி ஏற்றியவர்கள் தொடர்ந்து தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

உலக மக்கள் மத்தியில் புதிய வைரஸ் திரிபுகள் தொடர்ந்து பரவிக் கொண்டி ருக்கின்றன. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா பிறழ்வு புதியதொரு தொற்று நோய் போன்று உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது.

வெவ்வேறு நாடுகளில் அடையாளம் காணப்பட்ட மேலும் புதிய பல திரிபுகள் பலநாடுகளுக்கும் பரவியுள்ளன.டெல்ரா போன்று கொலம்பியா வைரஸ் உலகத் தொற்று நோயாகப் பரவிவிடலாம் என்று அச்சத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post