உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது! (படங்கள்)


  • குமாரதாஸன், பாரிஸ். 
உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது.d

பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமாகிய ரிவியராவை (Riviera) உள்ளடக்கிய
தெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப் பிராந்தியத்திலேயே பெரும் காட்டுத்தீ பரவி கட்டுக்கடங்காமல் எரிகிறது.அங்கு வார்(var)என்னும் மாவட்டத்தில் கடற்கரை நகரமான Saint-Tropez தீயினால் சூழப்பட்டுள்ளது.
 
திங்களன்று பரவத் தொடங்கிய தீ la plaine des Maures எனப்படுகின்ற இயற்கை வனவளப்பிரதேசத்தின் அரைவாசிப் பகுதி அடங்கலாக ஆறாயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தாவர இனங்களைத் தின்றுள்ளது. தொடர்ந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

விடுமுறை காலத் தங்ககங்களில் (campsites) கோடை விடுமுறையைக் கழிக்கின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் உட்பட சுமார் பத்தாயிரம்
பேர் பொலீஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிரு நிமிட அவகாசத்தில்
பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக இருப்பிடங்களை விட்டுத் தாங்கள் வெளியேற நேர்ந்ததாக உல்லாசப் பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் இருபது முதல் நாற்பது மீற்றர் உயரத்துக்குத் தீப் பிளம்பு கிளம் புவதைக் காணமுடிவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 900 வீரர்கள் 150 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 விமானங்கள் சகிதம் முழு மூச்சாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். 

புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகப் பலர் மருத்துவ
மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் பொதுவாகக் கடும் கோடையில்-காண்டாவனக் காலப் பகுதியில்-ஆங்காங்கே காட்டுத் தீ அனர்த்தங்கள் நேர்வதுண்டு. ஆனால் இந்த முறை நெருப்பின் வீரியம் மனித இருப்பை அச்சுறுத்துகிறது. வளிமண்டலத்தின் கடும் வெப்ப அனலும் அதனைப் பரப்பி வீசுகின்ற காற்றும் தீயணைப்பு முயற்சிகளைச் சவாலாக்கி உள்ளது.

நெருப்பு அங்கு பரந்த பரப்புக்குப் பரவிவிடக் கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் நாட்டின் அதிபர் மக்ரோன் நேற்று மாலை காட்டுத் தீ பாதித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். உள்துறை அமைச்சரும் அவருடன் அங்கு சென்றார்.மக்ரோன் அங்கு தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களோடு உரையாடிஅவர்களை உற்சாகப்படுத்தினார். தீ ஏற்படுத்தக் கூடிய உச்சப் பேரழிவு தவிர்க்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்த அவர், ஆனாலும் தொடர்ந்து போராட வேண்டி இருக்கும்- என்றார்
 
இந்த ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்கள் உலகை உச்ச வெப்பத்தில் வறுத்தெடுத்த மாதங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

மத்தியகடல் பிராந்தியத்தில் அதிகரித்த வெப்பம் காரணமாக கிறீஸ், ஸ்பெயின் துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளில் பல இடங்களில் காட்டுத் தீ அனர்த்தங்கள் ஏற்பட்டன.


Previous Post Next Post