ஜேர்மனியில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்குத் தொற்று! தடுப்பூசி ஏற்றாதவர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் மத்தியில் தீவிரமான தொற்றலை உருவாகியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றாளர்களது எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.

தற்போதைய நிலைவரத்தைத்"தடுப்பூசி ஏற்றாதவர்களின் பெருந்தொற்று "("pandemic of the unvaccinated") என்று நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான்(Jens Spahn) பிரகடனப்படுத்தியிருக்கிறார்.நாடு முழுவதும் நான்காவது வைரஸ் தொற்று அலை முழு வேகத்தில் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஜேர்மனியின் தொற்று நோய்த் தடுப்பு நிலையம் ரொபேர்ட் கொச் இன்ஸ்ரிரியூட் (Robert Koch Institute - RKI) கடைசியாக வெளியிட்ட அறிக்கையின்படி ஒரு நாள் தொற்றாளர்களது எண்ணிக்கை 33,949 ஆகும். இது கடந்த டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர் பதிவாகின்ற அதி கூடிய எண்ணிக்கை என்று கூறப்படுகிறது . 

ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றியோர் வீதம் குறைவாகும். அங்கு சனத் தொகையில் 66.5% வீதமானோரே முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.தடுப்பூசி ஏற்றாதவர்களுக்குப் புதிதாக சுகாதாரக் கட்டுப்பாடுகளை அறிவிக்கப் போவதாக சுகாதார அமைச்சர் கூறியிருக்கிறார்.

தொற்று அதிகரிக்கின்ற போதிலும் நோயின் தீவிர நிலைமையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரது எண்ணிக்கையில் இன்னமும் குறிப்பிடக்கூடிய அளவு அதிகரிப்பு ஏற்படவில்லை.
 
இதேவேளை, ஐரோப்பாவில் வைரஸ் பரவுகின்ற விஸ்தீரணம் மிகவும் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைச்சின் ஐரோப்பியப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சில ஆசிய நாடுகளையும் உள்ளடக்கிய முழு ஐரோப்பியப் பிராந்தியத்தில் தொற்றுக்கள் அதிகரிப்பதால் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாத காலப் பகுதியில் அரை மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

தடுப்பூசி ஏற்றுவதில் ஒழுங்கின்மை மற்றும் பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் காணப்படும் தளர்வுகள் போன்ற காரணங்களாலேயே தொற்றுக்கள் அதிகரித்துள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிரிவின் தலைவர் ஹான்ஸ் குழுகா (Hans Kluge) குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மிக அதிக எண்ணிக்கையாக 8,100 உயிரிழப்புகள் ரஷ்யாவில் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக 3,800 மரணங்கள் உக்ரைன் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ருமேனியா, ஹங்கேரி, குரோஷியா போன்ற நாடுகளிலும் தொற்றாளர் எண் ணிக்கை நாளாந்தம் உயர்ந்து வருகிறது.
Previous Post Next Post