பிரான்ஸில் வருமானம் குறைந்தோருக்கான 100 ஈரோ கொடுப்பனவு ஆரம்பம்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸ் அரசு கடந்த ஒக்ரோபரில் அறிவித்த வருமானம் குறைந்தோருக்கான நூறு ஈரோக்கள் கொடுப்பனவு இன்று திங்கட்கிழமை முதல் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களது விலைகள் அதிகரித்தமையால் மக்களது நாளாந்த வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஈடுசெய்வதற்காக வறிய மற்றும் நடுத்தரக்குடும் பங்களுக்கு 100 ஈரோக்கள் உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தார்.

பணவீக்கக் கொடுப்பனவு" ("inflation allowance") எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த உதவித் தொகை 2000 ஈரோக்களுக்குக் குறைந்த தொகையை (net)மாத ஊதியமாகப் பெறுகின்ற 38 மில்லியன் பேருக்கு வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இன்று அரச நிதி உதவி பெறுகின்ற மாணவர்களுக்கு (les étudiants boursiers) இந்தக் கொடுப்பனவு வழங்குவது ஆரம்பிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. 

அரச மற்றும் தனியார் தொழிற்றுறைப் பணியாளர்களுக்கு இந்த 100 ஈரோ அவர்களது சம்பளம் போன்று தொழில் வழங்குநர்களால் நேரடியாக வங்கிக் கணக்குக்கு இம் மாத இறுதியில் வழங்கப்படும்.

பணியாளர்கள் கடந்த ஒக்ரோபர் மாதம் 2,000 ஈரோக்களுக்குக் குறைவான ஊதியத்தைப் (net salary) பெற்றிருத்தல் அவசியம். ஓய்வூதியர்களும் இந்த உதவித் தொகை பெறுவதற்கு உரித்துடையவர்கள். அவர்களுக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரியிலேயே அது வழங்கப்படும்.
 
அதேசமயம் சுயதொழில் செய்வோருக்கும்(Travailleurs indépendants) இந்த உதவி கிடைக்கும்.பிரான்ஸின் சுயதொழிலாளர்களை ஒருங்கிணைக்கின்ற Urssaf (Union de recouvrement des cotisations de Sécurité sociale et d'allocations familial) நிறுவனம் பதிவு செய்து இயங்கும் சுயதொழிலாளர்களுக்கான கொடுப்பனவை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் அனுப்பிவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post