காதலனுடன் இணையும் ஆசை ஆங்கிலக் கால்வாயில் கரைந்தது! அடையாளம் காணப்பட்டது அவளின் சடலம்!!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
இளையவர்களில் பலரிடம் இருப்பது போன்ற"இங்கிலாந்துக் கனவு" மரியம் நூரியிடமும் இருந்தது. வடக்கு ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தைச் சேர்ந்த 24 வயது யுவதி அவர்.லண்டனில் வசிக்கின்ற தனது காதலனிடம் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும், அங்கு ஒரு வசதியான வாழ்வை அமைத்திட வேண்டும் என்பது அவளது தீராத ஆசை. 

இங்கிலாந்துத் தூதரகத்திடம் வீஸா கோரிப் பல தடவைகள் விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டன.காலத்தை இழுத்தடிக்கின்ற நீண்ட வீஸா நடைமுறைகளுக்குக் காத்திருந்து சலித்துப் போய் கடைசியில் வேறு வழியில் ஈராக்கை விட்டுப் புறப்பட்டாள். 

முதலில் இத்தாலிக்கும் பின்னர் அங்கிருந்து ஜேர்மனி வழியாக பிரான்ஸுக்கும் வந்தடைந்தாள்.காதலனைக் காணும் ஆசையில் ஆபத்தான கடற் பயணம் ஒன்றைத் துணிந்து நாடினாள்.
 
நவம்பர் 24 ஆம் திகதி மாலை வேளை. பிரான்ஸின் வடக்கே கலே (Calais) கரையோரத்தில் இருந்து சுமார் முப்பது பேருடன் புறப்பட்ட காற்று நிரப்பிய பிளாஸ்டிக் படகு ஒன்றில் மரியமும் ஏறியிருந்தாள். 

கலேயில் இருந்து தனது கனவுப் பயணத்தை ஆரம்பித்த அவள் ஆங்கிலக் கால்வாயின் மறுகரையைச் சென்றடையவில்லை.

காதலனுடன் "ஸ்னப்சற்" தொடர்பில் உரையாடியவாறு படகில் ஏறியவள் பாதித் தூரம் வரை எழுதிக்கொண்டே வந்தாள் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இடையில் படகின் காற்று வெளியேறுவதாகவும் அது மூழ்கும் ஆபத்தில் உள்ளதாகவும் அபாயச் செய்தி வந்துள்ளது.

கடலில் ஆபத்து வேளைகளில் ஆட்களை அடையாளம் காண உதவும் ஜிபிஎஸ் கருவி (emergency locator beacon)ஒன்றை மரியம் தன்னோடு வைத்திருந்தாள் என்று கூறப்படுகிறது. ஆனால் வழியில் ஓர் இடத்துக்கு அப்பால் அவள் தொடர்ந்து நகரும் அறிகுறி எதனையும் அக் கருவி காட்டாதது கண்டு காதலன் அதிர்ச்சியடைந்தார்.

பிரெஞ்சுக் கடற்படையினர் விடிகாலையில் கடலில் இருந்து மீட்ட பல சடலங்களில் மரியம் நூரியின் உடலே முதலில் அடையாளம் காணப்பட்டது.

படகில் கூடப் பயணித்த அவளது உறவினரான பெண் ஒருவர் உட்பட 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை கரையோரக் காவல்படை உறுதி செய்தது.

அளவுக்கு மீறிய சுமையால் காற்று நிரப்பிய படகில் வெடிப்பு ஏற்பட்டதாகஉயிர் தப்பிய இருவர் கூறியிருக்கின்றனர். சட்டவிரோதமாகக் குடியேறிகளை படகில் கடத்துகின்றவர்கள் எனக் கூறப்படும் சிலரைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். 

வசதியான வாழ்வு தேடி உலகின் எங்கெங்கோ இருந்து வந்து படகேறிய 27 பேரது சடலங்களும் பிரான்ஸின் சவச்சாலை ஒன்றில் அடையாளம் காண்பதற்காகக் காத்துக்கிடக்கின்றன.
 
ஐரோப்பா நோக்கி அதிகரித்துவரும் கடற் பயணங்களில் குறிப்பாக ஆங்கிலக் கால்வாயை அண்டி அடிக்கடி இடம்பெறுகின்ற மனித அவலங்களில் மரியம் நூரியின் கதை ஓர் உதாரணம் மட்டுமே.

குர்திஷ்தானில் ஆரம்பித்த இந்த யுவதியின்"இங்கிலாந்துக் கனவு" ஆங்கிலக் கால்வாயில் முடிந்த அவலச் செய்திகள் கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களில்
முக்கிய இடம்பிடித்திருந்தன.

ஈழத் தமிழர்கள் போன்று உலகெங்கும் அகதிகளாய்,குடியேறிகளாய்-அங்கீகரிக்கப்படாதவர்களாய்-அலைந்துகொண்டிருப்பவர்கள் குர்திஷ் மக்கள்.அண்மைக் காலங்களில் கடல்,தரை எல்லைகளைத் தாண்டும் ஆபத்தான குறியேற்றப் பயணங்களில் பெலாரஸ் முதல் ஆங்கிலக் கால்வாய் வரை பெரும் அவலங்களில் சிக்கி நிற்பவர்களில் குர்திஷ் மக்களே அதிகம் பேர்.

குடும்ப ஒன்றிணைவுகள், திருமணம் உட்பட குடியேறிகளுக்கான சட்டபூர்வ அனுமதிகளை நாடுகள் தடுத்தும் இறுக்கியும் இழுத்தடித்தும் வருவதால் அவர்கள் சட்டவிரோதமான பயண வழிமுறைகளை நாடுவதும் அதிகரித்துள்ளது.
 
"எவராவது ஜரோப்பா செல்லும் ஆசை இருந்தால் இந்த வழிகளை நாடாதீர்கள்.
அது ஒரு மரணப் பாதை.." என்று கூறி ஏனையோரை எச்சரிக்கிறார் மரியம்
நூரியின் மைத்துனி. வடக்கு ஈராக்கில் உள்ள அவளது இல்லத்தில் கூடிய உறவினர்கள் ஆறாத் துயரில் மூழ்கியுள்ளனர். 

இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே பந்தாடப்படுகின்ற இத்தகைய குடியேறிகளைக் கௌரவமாக ஏற்றுக்கொள்வதற்கு இரு நாடுகளும் முன்வரவேண்டும் - என்ற கோரிக்கைகளும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஒலிக்கிறது.
Previous Post Next Post