யாழ். சாவகச்சேரியில் ரயிலுடன் மோதி மாணவன் பரிதாபச் சாவு! (படங்கள்)


யாழ். சாவகச்சேரியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட மாணவன் ஒருவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இரட்டையர்களில் ஒருவர் தொடருந்துப் பாதையை கடந்த நிலையில் பின்னால் சென்ற மற்றையவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த உத்தரதேவி தொடருந்துடன் மோதியே இன்று இரவு 6.45 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வரணி இயற்றாளையைச் சேர்ந்தவரும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான உதயகுமார் பானுஷன் (வயது-18) என்பவரே உயிரிழந்தார்.

நாளை பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பங்கேற்கும் ஒன்றுகூடலும் விருந்துபசார நிகழ்வுக்காக இரட்டைச் சகோதரர்கள் சாவகச்சேரி நகரில் ஆடை எடுக்கச் சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post