திருநெல்வேலி சந்தைக்குச் செல்வோரிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது !


திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சந்தையில் வகுப்பு (மூடை தூக்குதல்)வேலை செய்து வரும் நபர் ஒருவர், வியாபரிகள் , நுகர்வோர்களிடம் உங்கள் மூடைகளை தூக்கி வருவதாக கூறி மூடைகளை தூக்கி செல்லும் போது , அவற்றில் இருந்து பொருட்களை திருடுதல், அதிக பணத்தினை மிரட்டி பெறுதல், மூடைகளை வாகனத்தில் ஏற்றிவிடுவதாக கூறி மூடைகளை தூக்கிக்கொண்டு தலைமறைவாகுதல் போன்ற செயல்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையிடமும் கோப்பாய் பொலிஸாரிடமும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான முறைப்பாடுகளை செய்து வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து அந்நபரினை கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர் காலையில் திருநெல்வேலி சந்தைக்கு வருவோரை இலக்கு வைத்து கோப்பாய் – இராச பாதை வீதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் இராச பாதை வீதியில் உள்ள தோட்ட வெளியில் ஆள்நடமாற்றம் அற்ற பகுதிகளில் நின்று காலை வேளையில் திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு மரக்கறி வாங்க வருவோர் மற்றும் மரக்கறி கொண்டு செல்வோரை இலக்கு வைத்து , பணம் மற்றும் அலைபேசி உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து வந்துள்ளனர்.

வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொறுப்பதிகாரி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் மற்றைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post