வவுனியாவில் பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து! தந்தையும் மகனும் உயிரிழப்பு!! பேருந்து மீது பொதுமக்கள் தாக்குதல்!!!

வவுனியா குருக்கள்புதுக்குளம்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதியில் மன்னார் - பறயணாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது உள்ளக வீதியில் இருந்து பிரதான வீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்தார்.

விபத்தினையடுத்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் பேருந்தினை தாக்கியமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூவரசங்குளம் காவல்துறையினர் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்பவத்தில் குருக்கள்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த பு.சிறிதரன்(வயது - 46) மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


Previous Post Next Post