பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட சிறுமி! நடந்தது என்ன?

பாரிஸ் நகர வட்டகையில் 12 வயது பள்ளிச் சிறுமி லோலா சூட்கேஸ் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அயலவரிடையே ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.

தங்கள் பிள்ளைகளைத் தனியே வெளியே அனுப்பப் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். பாடசாலையில் அவளது சக மாணவர்களுக்கும் உறவினர்களுக்கும் உளவியல் ஆற்றுப்படுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

அதிபர் மக்ரோன் சிறுமியின் பெற்றோர்களை இன்று எலிஸே மாளிகைக்கு அழைத்து நேரில் தனது அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறார். பாரிஸ் நகர முதல்வர் ஆன் கிடல்கோ லோலாவின் பாடசாலைக்குச் சென்று கல்விச் சமூகத்தினரை நேரில் சந்தித்துள்ளார்.

சிறுமி லோலாவின் சடலத்தை சூட்கேஸ் ஒன்றினுள் மறைத்து எடுத்து வந்தவர் என்று கண்காணிப்புக் கமரா காட்சிகளில் கண்டறியப்பட்ட யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரதான கொலைச் சந்தேக நபரான 24 வயதான அந்த அல்ஜீரிய நாட்டு யுவதி 2016 இல் மாணவர் வதிவிட வீஸாவுடன் பிரான்ஸுக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.  அவரது வீஸா காலம் தற்சமயம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் விமானம் மூலம் பயணம் செய்ய முயற்சித்த அவரை எல்லைப் பொலீஸார் கடந்த ஓகஸ்டில் விமான நிலையத்தில் தடுத்துக் கைது செய்திருந்தனர். சட்டபூர்வ வதிவிட ஆவணம் எதுவும்வைத்திருக்காத காரணத்தால் தடுக்கப்பட்ட அவருக்கு 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும் படியான கட்டாய வெளியேற்ற உத்தரவு (obligation to leave French territory) விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்திலேயே சிறுமியின் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லோலா கொலைச் சம்பவம் இன்று நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. தீவிர வலதுசாரி மரின் லூ பென், நாடு கடத்தப்பட வேண்டியோர் விடயத்தில் அரசு தொடர்ந்தும் அலட்சியமாக நடப்பதாகச் சாடிப் பேசியுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டுக்குள் தங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதாகச் சீறிப் பாய்ந்திருக்கிறார். பிரதமர் தலையிட்டுப் பதிலளிக்கும் நிலை அங்கு உருவானது.

சிறுமி வசிக்கின்ற மாடிக்குடியிருப்பில் தனது சகோதரி ஒருவருடன் சிறிது காலம் தங்கியிருந்ததாக அந்த யுவதி குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு குடியிருப்பினுள் சென்று வருவதற்கான நுழைவாயில் பாஸ் (access card) தொடர்பாகச் சிறுமி லோலாவின் தாயாருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விசாரணையாளர்கள் கூறியிருக்கின்றனர். 

தாயாருடனான முன் விரோதம் காரணமாகவே சிறுமியைக் கொன்று சடலத்தை மறைப்பதற்கு அவர் முயற்சித்திருக்கலாம் என்பதே விசாரணையாளர்களது பிரதான சந்தேகமாக உள்ளது. ஆனால், கடந்த வெள்ளியன்று பிற்பகல் சடலத்துடன் சூட்கேஸைச் சிரமப்பட்டு நகர்த்திச் சென்ற யுவதி , அதனை வெளியே கொண்டு செல்வதற்கு வழிப் போக்கர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். 

அச்சமயம் சூட்கேஸ் பெட்டியின் உள்ளே "சிறுநீரகம்" இருப்பதாக அவரிடம் கூறினார் என்ற தகவல் தற்போது பரவியுள்ளது. அந்தத் தகவல் மாடிக் குடியிருப்பிலும் அயலிலும் வசிப்போர் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. உடல் உறுப்புக்களைக் கடத்துவதற்காகவே சிறுமி லோலா கொலைசெய்யப்பட்டாள் என்று பரவிய தகவலை விசாரணை அதிகாரிகள் "வதந்தி" என்று கூறி இந்தக் கட்டத்தில் மறுத்திருக்கின்றனர். யுவதியின் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் அதனை மறுத்திருக்கிறார். 

தலைநகரில் நிகழ்ந்துள்ள இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வெளியாகிவருகின்ற பரபரப்பான தகவல்கள் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன.

கொலைக்கான காரணம் இன்னமும் மர்மமாகவே உள்ளது. சூத்திரதாரியான யுவதி கொலையை இன்னமும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் ஒரு மனநோயாளி போன்று காணப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அவரைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சடலத்துடன் சூட்கேஸைத் தனது காரில் ஏற்றி இடம்மாற்றுவதற்கு அந்த நபர் திட்டமிட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையில் சிறுமி லோலா மூச்சுத் திணறலால் உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது. பாலியல் வல்லுறவு புரியப்படாவிடினும் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் சடலத்தில் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் காலில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த" 1", "0" ஆகிய மர்ம இலக்கங்கள் குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
Previous Post Next Post