கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொலை செய்து விட்டு கொழும்பில் பதுங்கியிருந்த 18 வயது இளைஞன் கைது!!

கடந்த ஓக்டோபர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி டிப்போ சந்திப்பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் வட்டக்கச்சி – கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் ஜெயகரன் (33) என்ற நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இரும்பு கம்பி, கொட்டான்களால் தாக்கியும், கல்லால் எறிந்தும் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக ஆறு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தற்பொழுது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தேடப்பட்டு வந்த ஒரு நபர் கொழும்பு – 13 கதிரேசன் வீதி பகுதியில் ஒளிந்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்த தடுப்பு (இரணைமடு) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாரதிபுரம் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய அச்சுக்குட்டி என அழைக்கப்படுபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசாரணை நிறைவு பெற்றதும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post