53 இலங்கையர்களுடன் கடலில் தத்தளித்த மீன்பிடிப் படகு! மீட்டது பிரான்ஸ் கடற்படை!!

இந்து சமுத்திரத்தில் ரியூனியன் தீவுக்கு அருகே ஆழ் கடலில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 53 பேருடன் மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸின் கரையோரக் காவல் படையினர் மீட்டிருக்கின்றனர்.

வெள்ளி-சனிக்கிழமை இரவு நேரம் பிரான்ஸின் கடற்பரப்பில் பிரவேசித்த அந்தப் படகில் இருந்து அவசர உதவி கோரி விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்துக் கடல் மீட்புப் பிரிவினரும் கடற்படை ஜொந்தாமினரும் படகைப் பாதுகாப்பாக மீட்டு ரியூனியன் தீவின் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

"இமுலா 0559"(Imula 0559)எனப் பெயரிடப்பட்ட சுமார் 15 அடி நீளமான அந்த மீன் பிடிப் படகில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 53 பேர் இருந்துள்ளனர். அவர்களது சுகாதார நிலையைப் பரிசோதித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அனைவரும் தங்குமிடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று ரியூனியன் தீவில் இருந்து வெளியாகிய செய்திகள் தெரிவித்தன.

பிரான்ஸின் இந்து சமுத்திரத் தீவாகிய ரியூனியன் நோக்கி இலங்கை அகதிகள் படகுகளில் படையெடுப்பது இந்த வருடத்தில் இது நான்காவது தடவை ஆகும். இன்றைய வருகையுடன் சேர்த்துக் கடந்த நான்கு ஆண்டுகளில் பத்துத் தடவைகளில் 399 இலங்கைக் குடியேறிகள் படகுகளில் தீவினை வந்தடைந்திருந்தனர். அவர்களில் இந்த வருடம் மட்டும் வருகை தந்தோர் எண்ணிக்கை 122 ஆகும். 399 பேரில் ஆக 48 பேரது புகலிடக் கோரிக்கைகள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனையோர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கை அகதிகளைத் தீவுக்குக் கடத்தி வந்தவர்கள் எனக் கூறப்படுகின்ற இந்தோனேசியப் பிரஜைகள் மூவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அங்கிருந்து மேலும் பலர் படகுகள் மூலம் ரியூனியன் தீவுக்கு வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் கடலில் தென்படுகின்ற படகு அகதிகளை உடனடியாக மீட்பதற்கான ஆயத்த நிலையைத் தீவின் அதிகாரிகள் பேணிவருகின்றனர்.
Previous Post Next Post