பொலிஸ் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! (படங்கள்)

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், 32 வயதுடைய மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் கன்பியூசியஸ் என்ற இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலையில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் வீதியில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், வீதியால் சென்றவர்களின் உதவியுடன் நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post