கடத்தப்பட்ட ஜனசக்தி காப்புறுதி நிறுவன பணிப்பாளர் உயிரிழப்பு!

கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் (வயது-52)உயிரிழந்துள்ளார்.

இவரை சில நபர்கள் கடத்திச் சென்று தாக்கி பல நாடாவால் கட்டி பொரளை மயானத்தில் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குருந்துவத்தை மல்பாறை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று (14) பிற்பகல் பல கோடி ரூபா கடன் பெற்ற நபர் ஒருவரை சந்திக்கப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி சிறிது நேரத்தில் கணவரது கைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்த முயன்றவேளை தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய அவரது தொலைபேசி பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அவரின் மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்போது கடத்தப்பட்ட நபர் காரின் சாரதி இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்ததையும், கழுத்தில் கம்பியொன்றும் கிடந்ததையும் அவர் அவதானித்து காவல்துறையினரிடம் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடனடியாக செயற்பட்ட குறித்த நிறைவேற்று அதிகாரி, மயானத்தில் இருந்த தொழிலாளியின் உதவியுடன் கடத்தப்பட்டவரின் கைகளையும் கழுத்தில் இருந்த கம்பியையும் அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

கடத்தப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரிடமிருந்து பெற்ற எந்த அறிக்கையும் வெளியிட முடியாத நிலையில் இருப்பதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபரின் காருக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் பணிப்பாளரிடம் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் பணிப்பாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம்தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post