வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தில் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வர்த்தக நிலையம் மீதும் வர்த்தகர் மீது, வெளிநாட்டில் வசிக்கும் நபரிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டு, கூலிப்படையே தாக்குதல் மேற்கொண்டு, வர்த்தக நிலையத்தில் இருந்து 5 இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வியங்காட்டு சந்தைக்கு அண்மையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவொன்று, வெற்று கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து, உரிமையாளர் மீதும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தது. 

சம்பவத்தில் காயமடைந்த உரிமையாளர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமரா பதிவுகளின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார், யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர் .

விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் பணத்தினை பெற்றுக் கொண்டே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பணத்தினை பெற்றுக்கொண்டு கூலிப்படையாக தொழிற்படும் குழுக்கள் தொடர்பிலான தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அதன் அடிப்படையில் கூலிப்படையாக இயங்கும் நபர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் விசேட பொலிஸ் குழுவொன்று செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

Previous Post Next Post