பிரான்ஸில் விசா இல்லாத இளைஞனைத் திருமணம் செய்ய போலி விசாவில் பயணித்த யாழ்.யுவதி கைது!

பிரான்ஸில் விசா இல்லாத இளைஞனைத் திருமணம் செய்வதற்காக போலி விசா மூலம் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி உட்பட நான்கு பேர் விமான நிலைய குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி போலந்து வீசாக்களுடன் தோஹா கட்டார் ஊடாக போலந்து செல்ல முயன்றவர்களே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதாகினர். இவர்களில் இளம் யுவதியொருவரும் உள்ளடங்குகிறார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் ராஜகிரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மனித கடத்தல் கும்பல் ஒன்று இந்த நால்வரிடமும் பணம் பெற்றுக் கொண்டு சட்டரீதியாக வேலைக்காக போலந்துக்கு அனுப்பப்படுவதாக கூறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட 23 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி, பிரான்ஸ் இளைஞரை திருமணம் செய்ய சென்றது தெரிய வந்துள்ளது. விசா இல்லாத இளைஞன், இலங்கை வர முடியாத நிலையில், மணப்பெண்ணை போலி விசா ஊடாக போலந்திற்கு அழைத்து, பிரான்சிற்கு கூட்டிச் செல்ல திட்டமிட்டது யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஏனைய மூவரும் வேலைவாய்ப்பிற்காக பயணித்துள்ளனர்.

இந்த மோசடி நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post