பிரான்ஸில் வெடித்த போராட்டம்! அடுத்த கட்டம் ஜனவரி 31 இல்!! மக்ரோன் விடுத்த செய்தி!!!

உத்தேச ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்ட மூலத்தை "நியாயமானதும் பொறுப்புணர்வுள்ளதும்" எனத் தெரிவித்திருக்கின்றார் அதிபர் மக்ரோன். அதேசமயம் அது நிறைவேற்றப்படவேண்டியது அவசியம் என்றும் கூறியிருக்கிறார்.

ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்ட மூலம் ஜனநாயக வழி முறைகளில் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வாறே முடிவு செய்யப்பட்டது. அதனை மரியாதை, உளத் தூய்மையான பேச்சுக்கள் பொறுப்புணர்வு என்பவற்றுடன் அணுக வேண்டும். அதேசமயம் எதிர்ப்புப் போராட்டங்கள் பிரெஞ்சு மக்களுக்கு அதிக சிரமங்களைக் கொடுக்காதவாறும் வன்முறை மற்றும் அழிவுகள் இன்றியும் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் - என்று அவர் மேலும் கேட்டிருக்கிறார்.

நாடெங்கும் நேற்று எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்ற சமயத்தில் மக்ரோன் பாசிலோனாவில் நடைபெறுகின்ற பிரான்ஸ் - ஸ்பெயின் இரு தரப்பு உச்சி மாநாட்டில் (Franco-Spanish summit) கலந்து கொண்டிருந்தார். அங்கிருந்தவாறே அவர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தனது இந்த நிலைப்பாட்டை வெளியிட்டார்.

ஓய்வூதிய வயதை அதிகரிக்கின்ற சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நடத்தப்பட்ட முதல் நாள் வேலை நிறுத்தம் மற்றும் வீதிப் பேரணிகள் காரணமாக நாட்டில் நேற்று இயல்பு நிலை ஸ்தம்பித்தது.

போக்குவரத்து மற்றும் கல்வித் துறைகளது நாளாந்த நடவடிக்கைகள் செயலிழந்தன. சுமார் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற நேற்றைய பேரணிகளில் இருபது லட்சம் பேர் பங்குபற்றினர் என்று தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடும் பனிக் குளிருக்கு மத்தியில் நாடெங்கும் இடம்பெற்றுள்ள வீதிப் போராட்டங்களில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை - எதிர்பார்த்ததைப் போன்றே - பத்து லட்சத்தைக் கடந்துள்ளது. முதல் நாளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த ஒன்று திரண்ட தொழிலாளர் எழுச்சியை "ஒரு பெரும் வெற்றி" என்று தொழிற்சங்கத் தலைவர்களும் இடதுசாரி அரசியல் பிரமுகர்களும் வரவேற்றுள்ளனர்.

நேற்று நாடெங்கும் பேரணிகளில் 1.12 மில்லியன் (1.12 million) பேர் மட்டுமே பங்குபற்றினர் என்பதை உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இது அண்மைய ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கை ஆகும். அதேசமயம் நேற்று பாரிஸ் நகரில் நடந்த பேரணிகளில் சுமார் 80 ஆயிரம் பேரே கலந்துகொண்டனர் என்று அமைச்சு மதிப்பிட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கங்களின் தகவலின்படி பாரிஸ் Place de la République மற்றும் Place de la Bastille பகுதிகளில் சுமார் நான்கு லட்சம் பேர் திரண்டனர் என்று கணக்கிடப்பபட்டுள்ளது.

பேரணிகளுக்கு இடையே புகுந்து குழப்பம் விளைவித்த சக்திகளுடன் ஆங்காங்கே பொலீஸார் மோதும் நிலைவரம் காணப்பட்டது. குறைந்தது 30 பேர்வரை கைது செய்யப்பட்டனர். எனினும் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை.

வெற்றிகரமாக முடிந்துள்ள முதல் நாள் எதிர்ப்பு நிகழ்வுகளை அடுத்து, இரண்டாவது தொழிலாளர் எழுச்சி நாளாக எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதியை எட்டு தொழிற் சங்கங்களும் CFDT, CGT, FO, CFE-CGC, CFTC, Unsa, Solidaires, FSU) கூட்டாக அறிவித்துள்ளன. அதற்கிடையில் ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டம் எதிரவரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதால் அன்றைய நாளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சில தொழிற் சங்கங்கள் கேட்டுள்ளன.
Previous Post Next Post