பிரான்ஸில் வெளிநாட்டுக் குடியேறிகள் இன்றிச் சில தொழில்கள் இயங்காது! எதிர்க்கும் கட்சிகளுக்கு அமைச்சர் எடுத்துரைப்பு!!

பிரான்ஸில் சில தொழிற்துறைகள் குடியேறிகள் இல்லாமல் இயங்காது. இந்த யதார்த்த நிலைவரத்தை வலதுசாரிகள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்ரோன் அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர் ஒலிவியே டுஸ்சோ (Olivier Dussopt) இவ்வாறு வானொலிச் செவ்வி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

உணவகம் - ஹொட்டேல் துறைகள் முதல் சுகாதாரம் வரையான பல துறைகள் போதிய பணியாளர்கள் இல்லாமல் பெரும் பதற்றத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உணவகங்களது குசினிகளிலும் வீடுகளைப் பராமரிக்கின்ற தொழில் துறைகளிலும் பணி செய்கின்றவர்களில் 25 வீதமானோர் ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களே என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவ்வாறான துறைகள் வெளிநாட்டுக் குடியேறிகள் இல்லாமல் அத்துறைகள் இயங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

அரசு எதிர்வரும் நாட்களில் தனது புதிய குடியேற்றச் சட்டங்கள் அடங்கிய பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

நாட்டில் தொழிலாளர் படைக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகின்ற உணவகம், கட்டட நிர்மாணம் போன்ற சில தொழில் துறைகளில் ஏற்கனவே வீஸா இல்லாமல் - ஒழுங்கற்ற சூழ்நிலையில் - பணியாற்றிக் கொண்டிருக்கின்ற வெளிநாட்டவர்களுக்கு வீஸா வழங்கி அவர்களைச் சட்டபூர்வமான தொழிலாளர்களாக ஏற்றுக் கொள்வது அரசின் இலக்காக உள்ளது.

அதற்கான பிரேரணை ஒன்றையும் அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. ஆனால் நாட்டின் பழமைவாதக் கட்சியாகிய வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சியினரும் தீவிர வலதுசாரிகளும் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வதிவிட உரிமை வழங்கும் உத்தேச பிரேரணையை நீக்குமாறு அவர்கள் ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத மக்ரோனின் அரசு, முக்கிய சட்ட மூலங்களை நிறைவேற்றுவதற்கு இரு சபைகளிலும் வலதுசாரிகளது (Les Républicains) ஆதரவையே நம்பியிருக்க வேண்டி உள்ளது.

இந்த நிலைவரத்தைப் பயன்படுத்தி ரிப்பப்ளிக்கன் கட்சி புதிய குடியேற்றச் சட்டம் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்தி அதில் மாற்றங்களைச் செய்ய நிர்ப்பந்தித்து வருகிறது.

இவ்வாறான ஒரு சமயத்திலேயே தொழில் அமைச்சர், நாடு சரிவர இயங்குவதற்கு வெளிநாட்டுக் குடியேறிகள் தேவை என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post