பிரான்ஸ் இதற்கு முன்னர் காணாத அரசியல் குழப்பம்! கவிழ்கிறது ஆட்சி?

பிரான்ஸில் பிரதமர் மிஷெல் பார்னியர் தலைமையிலான வலதுசாரிச் சிறுபான்மை அரசு எந்த வேளையிலும் கவிழ்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சமூக நலப் பாதுகாப்புத் தொடர்பான வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பிரதமர் நாடாளுமன்ற வழிமுறைகளைத் தவிர்த்துக் குறுக்கு வழியில் அரசமைப்பின் 49.3 விதியைப் பயன்படுத்தியதை அடுத்து தீவிர வலது, இடது சாரிகளான இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளும் அவரது அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைச் சமர்ப்பிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.

பிரதமர் பார்னியர் சபையில் நேற்று திங்கட்கிழமை மாலை 49.3 விதியை பயன்படுத்திய கையோடு மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிக் கட்சி உடனடியாகவே அரசு மீதான நம்புக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்கப் போவதாக அறிவித்தது. அதேசமயம் இடதுசாரிகளால் முன்வைக்கப்படுகின்ற இதேமாதிரியான பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் என்றும் அக் கட்சி அறிவித்திருக்கிறது.

தீவிர இடதுசாரிக் கட்சி சார்பில் அரசுக்கு எதிரான பிரேரணை இவ்வார மத்தியில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மீதான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அது வாக்கெடுப்புக்கு வருவதற்கு இன்னமும் 48 மணிநேரம் அவசியமாகலாம். அதனால் பெரும்பாலும் இந்த வார மத்தியிலேயே வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இரண்டும் ஒருசேர வாக்களிக்க முன்வந்திருப்பதால் முதலாவது பிரேரணையிலேயே பார்னியரது அரசு கவிழ்வது உறுதி என்று அவதானிகள் எதிர்பார்க்கின்றனர்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத தொங்கு நாடாளுமன்றத்தில் தீவிர வலது - இடது சாரிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து வாக்களிக்கின்ற பட்சத்தில் மாத்திரமே அரசைக் கவிழ்க்க முடியும். அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தைத் தங்களது திருத்தக் கோரிக்கைகளை ஏற்காமல் புறக்கணித்துவிட்டு அப்படியே நிறைவேற்றுவதை இந்த இரண்டு தரப்புகளும் எதிர்க்கின்றன.

வரவு - செலவுத் திட்டம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காத பட்சத்தில் 48 மணிநேரத்தில் அரசைக் கவிழ்க்க முடியும் என்று மரின் லூ பென் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனையடுத்து பிரான்ஸின் அரசியலில் பரபரப்பான கட்டம் தோன்றியிருந்தது.

எதிரும் புதிருமான தரப்புகளாகிய தீவிர வலதுசாரிகளும் - தீவிர இடதுசாரிகளும் பதவியில் உள்ள அரசாங்கம் ஒன்றைக் கவிழக்க ஓரணிசேர்வது இதுவே முதல் முறை ஆகும்.

நிதி நெருக்கடி மிகுந்த ஒரு முக்கியமான தருணத்தில் நாட்டின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப் படமுடியாமல் பெரும் இக்கட்டில் சிக்கியிருப்பது ஐரோப்பா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கட்டிக்காக்கின்ற பொறுப்பைக் கொண்ட நாடாகவும் விளங்குகின்ற பிரான்ஸ் பெரும் கடன் சுமையில் உள்ளது. அதிலிருந்து மீள்வதற்காகப் புதிய வரிகள் மற்றும் அரச செலவுகளில் பெரும் குறைப்புகளை உள்ளடக்கிய பல திட்டங்கள் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

நாட்டின் நிதி சார்ந்த அரசியல் குழப்பங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் இந்த வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டேயாகவேண்டும் என்ற கட்டாய நிலை. ஆனால் மக்கள் மீது சுமைகளை அதிகமாக்குகின்ற அத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்ற எதிரணிகள் அதனை நிறைவேற்ற விடப்போவதில்லை என்று கங்கணம்கட்டியிருந்தன.

கடந்த செப்ரெம்பரில் பதவியேற்ற மிஷெல் பார்னியரது அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடையாது. வலதுசாரிகளது மறைமுக ஆதரவுடனேயே அது ஆட்சியைக் கொண்டு நடத்துகின்ற நிலைமை இருந்ததது.
Previous Post Next Post