யாழில் போலியான குறுந்தகவலை நம்பி 31 இலட்சத்தை இழந்த குடும்பம்!

தொலைபேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி 31 இலட்சம் ரூபாயை இழந்துள்ளது பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று.

பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் ஏமாற்றிச் சென்ற பின்னரே பணத்தை இழந்தவர்கள் காங்கேசன்துறை பிராந்தியப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. லண்டனில் நடத் சீட்டிழுப்பு ஒன்றில் இந்தத் தொலைபேசி இலக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண் (இலங்கைப் பெறுமதியில் இரண்டரைக் கோடி) பி.எம்.டபிள்யு. கார் என்பன விழுந்துள்ளன என்று அந்தக் குறுந்தகவலில் குறிபிடப்பட்டிருந்ததுடன், தொடர்பு கொள்ளும் மின்னஞ்சலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட போது காரின் திறப்பு படம், ஸ்ரேலிங்பவுண் பணக் கற்றைகள் என்பன வந்துள்ளன.

முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக 92 ஆயிரம் ரூபாய் பணம் தேவை என்றும் குறிப்பிட்டிருந்துள்ளது. அதையடுத்து இவர்களைப் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளனர். அதன் பின்னர் மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல்கள் ஊடாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

மின்னஞ்சலுக்குப் படிவங்களை அனுப்பி அந்த மர்மநபர்கள், ஒவ்வொரு திணைக்களத்துக்கும் வரி கட்ட வேண்டும் என்று தெரிவித்து பகுதி பகுதியாகப் பணம் அறவிடப்பட்டுள்ளன.

பணமும் காரும் இலங்கை வந்து விட்டது என்று தெரிவித்து பல திணைக்களங்களுக்குரிய போலிப் படிவங்களை அவர்கள் அனுப்பி பணத்தை வங்கியில் வைப்பிலிட வைத்துள்ளனர்.

இவ்வாறு சுமார் ஒரு மாதம் நடந்துள்ளது. மொத்தமாக 31 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் பெருந்தொகைப் பணம் வரவுள்ளது என்ற நம்பிக்கையில் வட்டிக்குப் பணத்தையும் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் இந்தப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் பணத்தையும் காரையும் கொழும்பு வெள்ளவத்தையில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அந்த மர்மநபர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொகைப் பணம் என்பதனால் உடனடியாகத் திறந்து பார்ப்பது ஆபத்து என்றும் அதன் பணம் மற்றும் காரின் ஆவணங்கள் திறப்பு என்பன அடங்கிய பெட்டி ஒன்று தரப்படும் என்றும் வீட்டுக்குக் கொண்டு சென்ற பின்னர் பெட்டியின் திறப்பு அவர்களின் வீட்டுக்கு வரும் என்றும் அந்த மர்மநபர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய குறித்த குடும்பத்தினர் கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றனர். அங்கு ஓரிடத்தில் அவர்களிடம் கறுப்புப் பெட்டி ஒன்றைக் கையளித்த ஒருவர் உடனடியாக மாயமாகி விட்டார்.

இவர்கள் அந்தப் பெட்டியோடு வீட்டுக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் அந்த நபர்கள் தொடர்பு கொள்ளவில்லை. பெட்டியின் திறப்பும் வரவில்லை.
அதற்கு மேலும் பொறுக்க முடியாது பெட்டியை உடைத்த போதே தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை அவர்களுக்குப் புரிந்துள்ளது.

அந்தப் பெட்டிக்குள் உடைந்த போத்தல் துண்டுகள், பஞ்சு, நாணத்தாள் அளவிலான கறுப்பு நிறக் காகிதங்கள் என்பன மட்டுமே இருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் இந்த விடயம் தொடர்பாக நேற்றுக் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததுடன், பரிமாறிக் கொண்ட தகவல்கள், ஆவணங்களைக் கையளித்துள்ளனர்.

இந்தப் பணம் பல வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த மோசடி நடவடிக்கை தொடர்பாக காங்கேசன்துறை பிராந்தியப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சி.டபிள்யு. சேனாதிர தலைமையில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான மோசடிச் சம்பவங்கள் சில முன்னர் பதிவாகியுள்ள போதும் இவ்வளவு பெருந்தொகை மோசடி செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post