கள்ள மண் அள்ளக் காணி வழங்கிய யாழ்.மாநகர சபை உறுப்பினர் கைது! (வீடியோ)

சட்டவிரோத மண் அகழ்வுக்கு தனது காணியை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டுத் தப்பிச்சென்று விட்டார்கள் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்குத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரைக் கண்ட மண் அகழ்வில் ஈடுபட்டோர் தப்பி ஓடிவிட்டனர்.

அதனால் காணி உரிமையாளர் எனத் தெரிவிக்கப்பட்ட யாழ்.மாநகர சபை உறுப்பினர் விசுவலிங்கம் கிருபாகரன் கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில் ஜே.சி.பி. வாகனம் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. புதையுண்ட நிலையில் சில்லுகள் காற்றுப் போன நிலையில் உள்ள உழவு இயந்திரம் அந்தப் பகுதியில் உள்ளது.

அத்துடன் சம்பவ இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உழவு இயந்திரமும் மாநகர சபை உறுப்பினருடையது என கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தப்பிச் சென்ற ஏனையவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அரியாலை பூம்புகாரில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ஐவரின் கைதுக்கு காரணமாகவிருந்த யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய முன்னணியின் உறுப்பினர் வி.கிருபாகரன், தனது காணியை சட்டவிரோத மண் அகழ்வுக்கு வழங்கியமை ஆச்சரியமாக உள்ளது என்று யாழ்.பொலிஸார் குறிப்பிட்டனர்.

Previous Post Next Post