கசிப்புக் குடித்த இடத்தில் கைகலப்பு! கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழப்பு!! ஐவர் கைது!!!

கிளிநொச்சிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ்ப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் குடும்பத் தலைவர் ஒருவரின் சடலம் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டிருந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்னேஸ்வரன் (வயது-38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இக் கொலையுடன் தொடர்புயவர்கள் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிளிநொச்சி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி மற்றும் தப்பிச் செல்லப் பயன்படுத்திய இரு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் மேலும் ஒரு சந்தேகநபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கசிப்பு குடித்திருந்தோம். கொல்லப்பட்டவருக்கும் எங்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட முரண்பாடு கத்திக் குத்தில் முடிவடைந்தது என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜெசிந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post