பல்கலையில் பகிடிவதை! ஆரம்ப அறிக்கை கையளிப்பு!! 3 மாணவர்களுக்கு இடைக்காலத் தடை!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட பகிடிவதை மற்றும் தொலைபேசியூடான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஆரம்ப அறிக்கை பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகளுக்கு மோசமான முறையில் பகிடிவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் ஒழுக்காற்றுக் குழு விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.

மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு இந்த விசாரணைகளை கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்தது.

இந்த ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் 3 மாணவர்களுக்குப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழையத் தடை விதித்து நிர்வாகம் பணித்தது.

இந் நிலையில் விசாரணைக்கழுவின் ஆரம்ப அறிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்த ஆரம்ப அறிக்கை மீதான முறையான விசாரணையை துறைசார் குழுவை அமைத்து தகுதி வாய்ந்த அதிகாரி முன்னெடுப்பார் என அறிய முடிகின்றது.

Previous Post Next Post