ஊரடங்குச் சட்ட நேரத்தில் கத்தியுடன் நடமாடிய யாழ்.இளைஞர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந் நேரத்தில் தேவையற்ற விதத்தில் வீதியில் பயணிப்பவர்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையிலேயே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபர்களை கைது செய்த பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ஆடு ஒன்றை வெட்டி இறைச்சி ஆக்குவதற்காக அருகில் உள்ள வீடொன்றுக்கு தாம் கத்தியுடன் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post