தூங்கா நகரம் தூங்கியது! ஒட்டுமொத்தமாக முடங்கியது பிரான்ஸ் தலைநகர் பரிஸ்!! (படங்கள்)

தூங்கா நகரம் தூங்கியது. தினம் தினம் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பாதங்களை முத்தமிடும் வீதிகள் இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றன.

பொதுப் போக்குவரத்துக்கான பாதைகள் திறந்து விடப்பட்ட நிலையிலும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது பரிஸ் நகரம்.

பிரான்ஸில் விமான நிலையம் மற்றும் வேறு பல இடங்களுக்குச் செல்லும் தொடருந்துகளுக்காக முண்டியடிக்கும் பயணிகளை சலிக்காமல் வரவேற்கும் பரிஸ் நோர்த் ( Gare du Nord) இன்று அநாதையாக்கப்பட்டிருக்கின்றது.

அங்குள்ள அனைத்து அங்காடிகளும் பூட்டப்பட்ட நிலையில் நாம் எங்கு நிற்கின்றோம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

காலை ஏழு மணிக்கு ஒருவரை ஒருவர் உரசிய வண்ணம் பயணிக்கும் தொடருந்துகள், நிலக் கீழ் நிலையங்கள், பேருந்துகள் எல்லாம் ஓரிரண்டு பயணிகளுடன் பயணிக்கின்றன.

பேருந்துகளின் முன்பக்கத்தால் ஏறுவதும், சாரதியின் அருகே செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்து ஊர்ப் புதினம், நாட்டுப் புதினம், உலக அரசியல், சினிமா விமர்சனங்கள், திருமணப் பேச்சுக்கள் இன்னும் இன்னும் எத்தனையோ விடயங்களை தேநீர் அருந்திய வண்ணம் தமிழ் மனம் வீசப் பேசும் லாச்சப்பல் மயான அமைதி கொண்டுள்ளது.

அத்துடன் அப் பகுதியில் ஓரிரு பலசரக்குக் கடைகள் மட்டும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்த வண்ணம் காத்திருப்பது மனதை அழ வைக்கின்றது.

சீனத்து தேசத்தை பிறப்பாகக் கொண்டு இன்று உலகையே உலுக்கும் கொரோனாவே நீ பரிஸை தூங்க வைத்து மகிழ்கின்றாயா? ஏன் இந்த சோதனை…

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரையில் பரிஸ் நகரில் பல இடங்களில் நான் கண்ட காட்சிகள் இவை.

Rks Arulmolithevan
Previous Post Next Post