19 மாவட்டங்களுக்கு வியாழன் அன்று ஊரடங்கு தளர்வு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் 19 மாவட்டங்களிலும் ஊரடங்கு இதேபோன்று தளர்த்தப்படும் என்றி முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு மீளப்பெறப்பட்டு வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமையே ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 16 காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் 16ஆம் திகதி காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14 செவ்வாய் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் இடர்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருள்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருள்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் வேறு பொருள்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது- என்றுள்ளது.
Previous Post Next Post