சுவிஸில் யாழ்.நபரின் உயிரிழப்பால் சர்ச்சை! ஊடகங்களில் கடும் வாக்குவாதம்!! சுகாதாரத் துறை விளக்கம்!!!

சுவிஸில் வாழ்ந்த இலங்கைத் தமிழரான புங்குடுதீவைச் சோ்ந்த லோகநாதன் சதாசிவம் (வயது 59)  கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் யாவரும் அறிந்ததே. அவரது உயிரிழப்பு தொடர்பில் ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சியும் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இவரது உயிரிழப்பு விவகாரம் பலரது மன அமைதியையும் கெடுத்துள்ளதோடு பேஸ்புக் குழு ஒன்றில் தற்போது இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பலரும் இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் என சுவிஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் பலரும் தங்கள் கோபத்தையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியிருந்தாலும் பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் எந்த விவாதமும் வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நீரிழிவு நோயாளியான அந்த இலங்கையர் குடும்ப மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, கொரோனா அறிகுறிகளுடன் குடியிருப்பிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த இலங்கையரின் ஆபத்தான நிலையை புரிந்து கொண்ட அண்டை வீட்டார் ஒருவர் மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கவும், அதன் பின்னரே அவருக்கு இருமலுக்கான மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி அளவில் அந்த இலங்கையர் குடியிருப்பிலேயே மரணமடைந்துள்ளார். அவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதை விசாரணை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணமும் நேரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசாரின் அறிக்கையும் உடற்கூராய்வு அறிக்கையும் வெளிவர காத்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றவியல் நடத்தை குறித்த எந்த சந்தேகமும் கருதப்பட முடியாது என விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளதாவது,

அந்த இலங்கையர் மரணமடைவதற்கு ஒரு வாரம் முன்னர் சாதாரண பரிசோதனைக்கு தமது குடும்ப மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், குடும்ப மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு அவர் உட்படுத்தப்பட்டார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமடையாததை அடுத்து அவர் மருத்துவரை நாடவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதே கருத்தை மண்டல சுகாதார அமைப்பும் அதன் மருத்துவரும் உறுதி செய்துள்ளனர்.

நோயாளி தொடர்பில் மருத்துவரின் அணுகுமுறையில் எந்த சந்தேகமும் இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தங்களுக்கு கிடைத்த தகவலின்படி திடீரென கடுமையான நோயின் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது, இதனால் நோயாளிக்கு அவசர எண் 144 ஐ உரிய நேரத்தில் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது என்கின்றனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பிட்ட மருத்துவரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், தொடர் நடவடிக்கை அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் நோயாளியின் தீவிரத்தன்மை தொடர்பில் அண்டை வீட்டார் எழுப்பிய அவசர உதவி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது என மண்டல மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா நோயாளிக்கு இருமலுக்கான மருந்து அளிக்கப்பட்ட விவகாரத்தை குடும்ப மருத்துவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நோயாளியின் நிலைமையை கருத்தில் கொண்டு அவருக்கு குடியிருப்பில் சிகிச்சை அளிக்கப்படவேண்டிய சூழல் ஏற்பட்டால், அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையரின் மர்ம மரணம் தொடர்பில் அரசு வக்கீலின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில்,

நாங்கள் தற்போது அனைத்து ஆவணங்களுக்காகவும் காத்திருக்கிறோம், பின்னர் அவற்றை ஆராய்வோம். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முடிந்ததும் இன்னும் தெளிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post