அபாய எல்லையைக் கடந்தது யாழ்ப்பாணம்! திறக்கப்படவுள்ளது முடக்கப்பட்ட பகுதிகள்!!

யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் நாளை மறுநாள் (13) முதல் திறந்து விடப்படவுள்ளன. 21 நாள் முடக்கத்தின் பின்னர் தாவடிக்கிராமம், அரியாலை பகுதிகள் திறந்து விடப்படவுள்ளன.

சுவிஸ் போதகர் சற்குணத்தின் மூலம் கொரோனா தொற்றிற்கு இலக்கான கட்டிட ஒப்பந்தக்காரர் தாவடி கிராமத்தை சேர்ந்தவர். போதகரின் மூலம் யாழில் ஏழு பேர் தொற்றிற்கு இலக்காகினர். போதகருடன் நெருங்கிப்பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், போதகர் தங்கியிருந்த அரியாலை பகுதி முடக்கப்பட்டுள்ளது.

போதகரின் மூலம் தொற்றிற்கு இலக்கான கட்டிட ஒப்பந்தக்காரர் வசிக்கும் தாவடி கிராமமும் கடந்த 23ஆம் திகதி முடக்கப்பட்டது. இதற்கு முன்னதாக அரியாலை கிராமம் முடக்கப்பட்டிருந்தது.
தொற்றிற்கு இலக்கானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அனைவரும் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆறு பேர் மாத்திரமே தொற்றிற்கிலக்காகியது தெரிய வந்தது. ஏனைய யாருக்கும் தொற்று இருக்கவில்லை.

14 நாட்கள் தனிமைப்படுத்தலை ஆரம்பத்தில் அதிகாரிகள் கடைப்பிடித்தாலும், 14 நாட்களின் பின்னரும் கொரொனா அறிகுறிகள் தென்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, முடக்கப்பட்ட பகுதிகள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்த காலப்பகுதியில் முடக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிப்பழகியவர்களிடம் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் யாரும் தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை. தொடரும் பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஓரிரு பரிசோதனைகள் எஞ்சியுள்ளன, அதன் முடிவுகளும் திருப்தியாக இருந்தால் நாளை மறுநாள்-21ஆம் திகதி- யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் திறந்து விட முடியும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் கண்காணிப்பு மேலும் சில நாட்களிற்கு தொடரும்.
Previous Post Next Post