யாழில் திரைமறைவில் முன்னெடுக்கப்படும் கொரோனா பரப்பும் முயற்சி? அவதானம் மக்களே!!

சுவிஸ் போதகரால் யாழ்ப்பாணத்துக்கு பரப்பப்பட்ட கொரோனாத் தொற்றினால் இன்று யாழ்ப்பாண மாவட்டம் நெட்டூரப்பட்டு நிற்கிறது. போதகரின் கூட்டத்துக்குச் சென்றவர்கள் தனிமைப்படுத்தப்படும் துன்பத்துக்கு ஆளாயினர். தவிர, போதகரோடு சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற படலம் சில காலம் நீடித்தது.

இதில் வேடிக்கைகளும் நடந்தன. தமக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்க நினைத்த ஒரு சிலர் சில பெயர்களைக் கூறி இவர்கள் போதகரின் கூட்டத்துக்குச் சென்றவர்கள் என்று அநாமதேய தகவல்களை கொரோனா கட்டுப்பாட்டு இடங்களுக்கு அறிவித்துவிட, அவ்வளவுதான் பொலிஸார், குறித்த பெயர் உடையவர்களைத் தேடிப்பிடித்து புலன் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்த பின்னர் விடுதலை செய்தனர். இவையயல்லாம் போதகரின் புண்ணியத்தால் நடந்து முடிந்த நாடகங்கள்.

இவை ஒருபுறமிருக்க சுவிஸ் நாட்டில் இருந்து மத போதனை செய்ய வந்த போதகர் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு இலங்கையில் ஏற்பட்டிருந்த பின்னரே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அப்படியானால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு யார் காரணம் என்பதையும் கண்டறிந்தாக வேண்டும்.

எனினும் சுவிஸ் போதகர் கொரோனாத் தொற்றுடன் யாழ்ப்பாணத்துக்குள் வருவதற்கு அனுமதித்தவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தால், இப்போது கொரோனா தொற்று உள்ள அபாயமான இடமாக அறிவிக்கப்பட்ட கொழும்பில் இருந்து எட்டுப் பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்கள் கொழும்பில் இருந்து வந்த லொறிகளில் ஏறி வந்தவர்கள் என்றால், இவர்கள் வரும்போது படைத்தரப்பு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்வி ஏற்படுகிறது.

ஒரு மாவட்டத்தை விட்டு இன்னொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமாயின் அதற்குரிய ஏற்பாடுகள், நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு உரிய அனுமதிப் பத்திரங்களுடனேயே பயணம் செய்ய முடியும்.

ஆனால் குறித்த எட்டு பேர் எந்தவித அனுமதிகளும் இன்றி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த லொறிகளில் ஏறி வந்துள்ளனர் எனும்போது இவர்களின் விடயத்தில் சோதனைச் சாவடிகளில் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்கும்போது பல்வேறு சந்தேகங்கள் எழவே செய்கின்றன.

இதில் முக்கியமாக சுவிஸ் போதகரின் யாழ். வருகை, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்த எட்டுப் பேர் என்ற தகவல்களோடு, தென் பகுதியில் இருந்து தனிமைப்படுத்தல் என்ற பேரில் வட பகுதிக்கு அழைத்து வரப்பட்ட ஆயிரத்து இரு நூறு பேர் என்ற வகையில் பார்க்கும்போது, வட பகுதி மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்பதை மட்டும் சொல்லியாக வேண்டும்.
Previous Post Next Post